‘’வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து,’’ என்ற தலைப்பில் வைரலாக ஷேர் செய்யப்படும் ஒரு மருத்துவக் குறிப்பை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Puradsifm

என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த 2016ம் ஆண்டு பகிர்ந்துள்ள இந்த கட்டுரை இன்றளவும் வைரலாக பகிரப்படும் ஒன்றாக உள்ளது.

இதில், சோற்றுக்கற்றாழை, தேன், விஸ்கி அல்லது பிராந்தி கலந்து தயாரிக்கப்படும் கை மருந்து ஒன்றை பயன்படுத்தி கேன்சரை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இதற்கான செய்முறை, பயன்படுத்தும் முறை உள்ளிட்டவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், இந்த சிகிச்சை முறையை பிரேசில் நாட்டை சேர்ந்த பாதிரியார் Fr Romano Zago என்பவர் கண்டுபிடித்த ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

செலவு குறைவு என்பதோடு, வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
புற்றுநோய் குணப்படுத்த ஏராளமான சித்த வைத்திய முறைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், அவை எல்லாம் சரியான சிகிச்சை முறைகளா என்று உரிய ஆய்வு செய்வதும் அவசியமாகும். ஆய்வு செய்யாமலேயே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பகிரப்படும் இத்தகைய தகவல்களை நம்புவது நம் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாகும்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை முறை உள்ளதா அல்லது இது சரியான சிகிச்சை முறைதானா என்று மூலிகை ஆராய்ச்சியாளர் எம்.மரிய பெல்சின் அவர்களிடம் கேட்டோம்.

இதுதொடர்பாகச் சில நாட்கள் கால அவகாசம் கேட்ட அவர், மேற்கண்ட சிகிச்சை முறை பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். பல மருத்துவ குறிப்புகளையும் படித்து பார்த்த அவர் இறுதியாக நமக்கு தெரிவித்த பதில், இது தவறான தகவல் என்பதாகும்.

புகைப்படம்: மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்.

மேலும் அவர் கூறுகையில், ‘’ஓரளவுக்கு இந்த மருத்துவக் குறிப்பில் உண்மை இருக்கும் என நினைத்தேன். ஆனால், இதில் துளி கூட உண்மையில்லை. இது மக்களை தவறாக வழிநடத்தக்கூடியதாகும். இது முற்றிலும் தவறான தகவல். இதில் கூறப்படும் சிகிச்சை முறையை பின்பற்றி புற்றுநோய் குணமானது என எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை. அதனால், இதனை முழுவதுமாக நம்பி மக்கள் உயிரை பறிகொடுக்காமல், உரிய மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நலம்,’’ எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, fr romano zago என்பவர் யார் என்ற விவரம் தேடினோம். அப்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த அவர் இதுபற்றி விரிவான ஆய்வு செய்து, புத்தகம் எழுதியுள்ளதோடு, செய்முறை விளக்கம் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளதாக, இணையத்தில் நிறைய தகவல்களை காண நேரிட்டது.

இதுபற்றிய கையேடு ஒன்றை அவர் அமேசான் உள்ளிட்ட இணையதளங்களில் விற்பனை செய்தும் வருகிறார். எனினும், இவை எல்லாம் சம்பந்தப்பட்ட நாடு அல்லது உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவை கிடையாது.

எனவே இதில் கூறப்படுவதை முழு உண்மையாக நம்புவது நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் மருத்துவ குறிப்பில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது. மருந்து தயாரிப்பது பற்றி குறிப்பிடுகிறார்களே தவிர, இது இன்னும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில், நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: Parlty False