மூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா?

குற்றம் சமூக ஊடகம் மருத்துவம் I Medical

“மூளைச்சாவு பித்தலாட்டத்தின் உச்சம்! மூளை இறக்குமா? இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில், மூளைச்சாவு என்பது மக்களை ஏமாற்றும் மோசடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மூளைச்சாவுபித்தலாட்டத்தின் உச்சம் !

https://www.facebook.com/groups/638741463130558/permalink/904744589863576/

Archived link

மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புக்கள் கொள்ளை  அடிக்கப்படுகின்றன என்று மிகப்பெரிய கட்டுரை வடிவில் பதிவு உள்ளது. இதில், முக்கிய உறுப்புக்கள் எல்லாம் இயங்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி உடல் உறுப்புக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், கோமா என்று அழைப்பதைத்தான் டாக்டர்கள் பிரெயின் டெத் (மூளைச்சாவு) என்று குறிப்பிட்டு ஏமாற்றுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மருத்துவத்தை பின்பற்றுவதால்தான் இந்த நிலை. சுதந்திரம் பெற்றபோது ஆங்கில மருத்துவத்தை விரட்டாததன் விளைவுதான் நம்மை இன்று உயிரோடு புதைக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆங்கில மருத்துவமே தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்ததான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்ட ஷெட்யூல்-டி 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளைக் குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது. இந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமிய வைத்தியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், ஶ்ரீதர் சாமி என்பவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். உடல் நலம், உடல் உறுப்புத் திருட்டு, நம் பாரம்பரிய வைத்திய முறைகள், சட்டம் என்று இதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் இந்த கட்டுரை உண்மையானதுதான் என்று நம்பும்படி உள்ளது. இனிமேலாவது விழிப்படையுங்கள்! உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்! என்று கூறியுள்ளார். இதனால், ஏராளமானோர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் நடைபெறுகிறது.  2008ம் ஆண்டு ஹிதேந்திரன் என்ற மாணவன் பைக் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் மூளைச்சாவு நிலையை அடைந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். ஹிதேந்திரனின் பெற்றோரும் டாக்டர்களே. அவர்கள் தங்கள் மகனின் உறுப்புக்களைத் தானமாக வழங்க முன் வந்தனர். ஹிதேந்திரன் இதயம் சிறுமி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. தமிழகமே ஹிதேந்திரனை வாழ்த்தியது. இதைத் தொடர்ந்து மூளைச்சாவு அடையும் தங்கள் உறவினர்களின் உள் உறுப்புக்களை பலரும் தானமாக வழங்கி வருகின்றனர். யார், என்ன என்ன உறுப்புக்களை தானம் செய்யலாம் என்று விகடனில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் உறுப்பு தானம் நடக்கிறது. இதற்கான மத்திய அரசின் விருதை 4வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் பெற்றுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உடல் உறுப்பு தானமாக மட்டுமே பெறப்படுகிறது. இதில், கட்டாயம் இல்லை. தமிழகத்தில் மோகன் ஃபுண்டேஷன் என்ற அமைப்பு உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள கணக்குப்படி, 2010 பிப்ரவரி முதல் 2013 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 142 பேர் மூளைச்சாவு நிலையை அடைந்துள்ளனர். இதில், 92 குடும்பத்தினர் உடல் உள் உறுப்புக்களை தானமாக வழங்க முன் வந்துள்ளனர். 50 குடும்பத்தினர் தானமாக வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களிடமிருந்து உள் உறுப்புக்கள் தானமாகப் பெறப்படவில்லை என்று கூறியுள்ளது. இது பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்ய சில விதிமுறைகள் உள்ளன. இது குறித்து தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணருமான ஜோ.அமலோற்பவநாதன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

“ஒருவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்துவிட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு நபர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும்.

மூளைச் சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச் சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்… ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூளைச் சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். அனிச்சைச் செயல்கள் (Brainstem Reflexes) பரிசோதிக்கப்பட்டு அவை நிரந்தரமாகச் செயலிழந்ததைச் சுமார் ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டு தடவை உறுதி செய்வார்கள்.

அதற்குப் பிறகு சுவாச நிறுத்தப் பரிசோதனை என்ற ஒன்றையும் செய்து (Brain Death) மூளைச் சாவை உறுதி செய்வார்கள். இப்படி, பல கட்டப் பரிசோதனைகளைச் செய்துதான் மூளைச் சாவு என்பது முடிவு செய்யப்படும்.” இது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கோமா என்பதுதான் மூளைச்சாவு என்று கூறப்படுகிறது என்று மேற்கண்ட பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கோமா வேறு, மூளைச்சாவு வேறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், கோமாவின் நிலைகளையும் பட்டியலிட்டுள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் மூளைச்சாவு என்றால் என்ன, எப்படி முடிவு செய்யப்படுகிறது, கோமாவும் மூளைச்சாவும் வெவ்வேறு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக இந்த பதிவில், “மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்ட ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

குறிப்பிட்ட சட்டப் பிரிவைத் தேடிப் பார்த்தபோது, இந்த தகவல் பாதி உண்மை, பாதி பொய் என்பது தெரிந்தது. திருத்தப்பட்ட ஷெட்யூல் ஜெ-ல் எய்ட்ஸ், மாரடைப்பு, க்ளைக்கோமா, சர்க்கரை வியாதி, கண் புரை, சிறுநீரக கல், வெரிகோஸ் வெயின் உள்ளிட்ட 51 வகையான பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளனர். ஆனால், இந்த நோய்களை குணமாக்குகிறேன் அல்லது வராமல் தடுக்கிறேன் என்று மருந்து அளித்தல் கூடாது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டப் புத்தகத்தின் 371ஆவது பக்கத்தில் இது விரிவாக உள்ளது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று இவற்றுக்கு மருத்துவ சிகிச்சையை ஆங்கில மருத்துவத்தில் அளிக்கக் கூடாது என்று இல்லை. இன்று வரை சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் குணமாக்க மருந்து இல்லை. சர்க்கரை நோயால் வரக்கூடிய பக்கவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கண் புரை வராமல் தடுக்க, வந்த பின் குணமாக்க எந்த மருந்தும் இல்லை. கண் புரை ஏற்பட்டால் கேட்ராக்ட் அறுவைசிகிச்சை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவில், “ மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் நினைத்தார்கள்… அதன் பிறகு நான் கோமாவில் இருந்து எழுந்தேன்” என்று அமெரிக்க பெண் ஒருவரின் செய்தி ஒன்றை ஆதாரமாக அளித்துள்ளனர். தலைப்பிலேயே நினைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதை காணலாம். டாக்டர்கள் அப்படி அறிவிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

அந்த செய்தியை நாமும் படித்தோம். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், சுய நினைவு இழந்து, மிகவும் ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார் இந்த பெண். தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் சுயநினைவுக்கு வந்திருக்கிறார் என்கிறது அந்த செய்தி. மது அருந்துதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மூளைச்சாவு என்ற மருத்துவர்கள் நினைத்தார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கின்றனர். மற்றபடி அந்த பெண் மூளைச்சாவு அடைந்தவர் என்று அறிவிக்கப்பட்டவர் இல்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பு பெறுவதில் முறைகேடு நடந்ததாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்மைதான். விழுப்பும் அருகே சாலை விபத்தில் இறந்த மணிகண்டன் என்பவரின் உறுப்புக்களை தானமாக பெற்றுள்ளனர்.

இறந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர். இதனால், அவரது பெற்றோர் கேரள முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில், மூளைச்சாவு அடைந்தது தொடர்பாக எந்த ஒரு சந்தேகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதிலேயே அதிக அளவில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில்,

1 ) உரிய மருத்துவ ஆய்வுகள் நடத்திய பிறகே மூளைச்சாவு அறிவிக்கப்படுகிறது.

2 ) மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பு கட்டாயமாகப் பெறப்படுவது இல்லை. விருப்பம் இல்லாதவர்களிடமிருந்து உறுப்புக்கள் எடுப்பது இல்லை.

3) குறிப்பிட்ட 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருத்துவமே பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குணப்படுத்தும் என்று மருந்து வழங்கக் கூடாது என்று மட்டுமே சட்டம் சொல்கிறது. சிகிச்சை அளிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

4) ஆங்கில கட்டுரை ஆதாரம், தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது.

5) மூளைச்சாவு முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரிலும் கூட, யாருக்கு தானமாக ஒதுக்கப்பட்டது என்பதில்தான் முறைகேடு நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. உயிரைக் கொன்று தானம் பெறப்பட்டதாக கூறப்படவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த கட்டுரை தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை சிறந்ததுதான்… ஆனால், ஒட்டு மொத்தத்தில் ஆங்கில மருத்துவமே தவறானது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட பதிவு உள்ளது. இதுபோன்ற கட்டுரைகள், உடல் உறுப்பு தானம், மருத்துவ சிகிச்சை பெறுவது தொடர்பாக இதுவரை மேற்கொண்ட விழிப்புணர்வை சிதைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:மூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False