
காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டது போன்ற ட்வீட்டின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம்…, “என் நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பா.ஜ.க பாசிச ஆட்சிக்கு எதிராக எங்கள் சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதில் எப்போதும் மும்மரமாக இருக்கின்றீர்கள். இவரைப் போன்ற சில தலைவர்களால் இஸ்லாமிய சமுதாயம் இந்தியாவின் அந்தந்த பகுதிகளில் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த ட்வீட்டை இம்ரான் கான், 2019 ஆகஸ்ட் 17ம் தேதி பிற்பகல் 3.42க்கு வெளியிட்டதாக உள்ளது. இந்த பதிவை, Savarkar the nationalist என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளது.
நிலைத் தகவலில், “*ஸ்டாலினை பாராட்டும் பாக் – பிரதமர் இம்ரான்கான்.!!* அவன் பாராட்டும் அளவுக்கு இவன் உள்நாட்டுக்குள் *#தேசதுரோகம்* செய்து வருகின்றான் என்பதற்கான ஆதாரம்; மேலே உள்ள ஆதரவு மடல்…☝*NIA கவனம் கொள்ளுமா?” என்று குறிப்பிட்டு உள்ளனா. இந்த ட்வீட் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று பேசி வரும் கட்சி தி.மு.க. காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தாமல், சட்டமன்றத்தை முடக்கிவைத்துவிட்டு 370வது பிரிவு நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அக்கட்சி. அம்மாநில சட்டமன்றத்தின் தீர்மானம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேட்டு வருகின்றன.
370வது பிரிவு நீக்கம், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதை கண்டித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில், “பணிந்து போகும் ஆளுநரின் உதவியுடன் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-வது பிரிவை நீக்குவது, மாநிலத் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் முடிவு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. இது இந்தியாவின் கூட்டாட்சி வரலாற்றின் கருப்பு தினம்.
மத்திய அரசின் முடிவைத் துரிதப்படுத்தும் செயலை இந்திய குடியரசுத் தலைவர் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக, ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. காஷ்மீரி சகோதரர்கள், சகோதரிகளுக்கு தி.மு.க துணை நிற்கும். இந்திய கூட்டாச்சியின் மீது நடைபெறும் எந்த தாக்குதலுக்கு எதிராக தி.மு.க நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த இடத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தோ, காஷ்மீர் பாகிஸ்தானுடன் செல்ல வேண்டும் என்றோ மு.க.ஸ்டாலின் கூறவில்லை. மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் செல்லவில்லை.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகஸ்ட் 17ம் தேதி ட்வீட் வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். எந்த ஒரு தேசிய, மாநில செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகங்களிலும் அப்படி ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் நன்றி கூறியிருந்தால் அதை எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கும். குறிப்பாக தீவிர வலதுசாரி ஊடகங்களிலாவது அது வந்திருக்கும். அப்படி எந்த ஒரு ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகவில்லை. தினமலரில் ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். தினமலரிலும் கூட ஸ்டாலினுக்கு இம்ரான் கான் நன்றி கூறினார் என்று ஒரு சிறு செய்தி கூட வெளியாகவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் ஆகஸ்ட் 17ம் தேதி அவர் சில ட்வீட்களை வெளியிட்டிருந்தார். சில ஆங்கிலத்திலும் சில உருது மொழியிலும் இருந்தது. ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது போன்று எந்த ஒரு ட்வீட்டும் அவருடைய பக்கத்தில் அவர் வெளியிடவில்லை.


50 ஆண்டுகளில் முதன்முறையாக காஷ்மீர் விவகாரம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தே அவர் பல ட்வீட்களை வெளியிட்டிருந்தார்.
காஷ்மீர் விவகாரம் ஐ.நா சபையில் விவாதிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் முயற்சி காரணமாக விவாதிக்கப்பட்டதை, மோடியின் முயற்சி காரணமாக விவாதிக்கப்பட்டது என்று லடாக் எம்.பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒருவேளை இம்ரான்கான் ட்வீட் வெளியிட்டுவிட்டு அதை அகற்றிவிட்டாரா, இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்களில் ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அங்குள்ள ஊடகங்களிலும் கூட எதுவும் செய்தி இல்லை. பாகிஸ்தானின் பிரபல dawn.com நாளிதழின் இணையதளத்தில் மு.க.ஸ்டாலின் பற்றி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், கருணாநிதி நினைவு, ஜெயலிதா நினைவு என பல செய்திகள் கிடைத்தன. மு.க.ஸ்டாலினுக்கு இம்ரான் கான் நன்றி கூறினார் என்று எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

நம்முடைய ஆய்வில்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறினார் என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை.
ஒருவேளை ட்வீட் வெளியிட்டு அகற்றினாரா, இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடியபோது அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த ட்வீட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின் நிலைத்தகவலில், , “ஸ்டாலினை பாராட்டும் பாக் . பிரதமர் இம்ரான்கான். அவன் பாராட்டும் அளவுக்கு இவன் உள்நாட்டுக்குள் தேசதுரோகம் செய்து வருகின்றான் என்பதற்கான ஆதாரம் மேலே உள்ள ஆதரவு மடலில்… NIA கவனம் கொள்ளுமா?” என்று கேட்டுள்ளனர். இப்படி பொய்யான, பிரச்னையை உண்டாக்கும் வகையில் ட்வீட்டை தயாரித்து வெளியிட்டதற்கு இவர்கள் மீது காவல் துறை ஏதும் நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவருடைய சந்தேகமாக இருக்கிறது!
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாக். பிரதமர்?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
