அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி!

அரசியல் சமூக ஊடகம்

காஞ்சிபுரம் அத்தி வரதரை அருகில் இருந்து தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Rajini 2.png

Article Link I Archived Link

Archived Link

ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசிக்கும் படத்துடன், “அத்தி வரதரை அருகில் இருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா?” என்று தலைப்பிட்டு ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய இணையதளத்தில் ஆகஸ்ட் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகிறனர்.

உண்மை அறிவோம்:

அத்தி வரதரை அருகிலிருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா என்று கேள்வியுடன் செய்தி ஒன்றை ஏஷியா நெட் தமிழ் வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை ஏஷியா நெட் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரவில்லை என்றாலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி வருகிறது. 

Rajini 3.png

எனவே, ஏஷியா நெட் தமிழ் வெளியிட்ட அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். செய்தியின் ஹைலைட்டே பயங்கர ஷாக்கிங்காக இருந்தது.

“சொந்தக் காசிலிருந்து எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டும் வழக்கம் இல்லாத நடிகர் ரஜினிகாந்த் அத்தி வரதரை அருகிலிருந்து தரிசிக்க அர்ச்சகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ’மக்கள் செய்தி மையம்’ பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘வியாபார கடவுளாக்கப்பட்ட அத்தி வரதர்’என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அச்செய்தியின் விபரம்…” என்று தொடங்கியது அந்த செய்தி.

Rajini 4.png

செய்தியை படித்துப் பார்த்தோம்… அதில் எந்த இடத்திலும் ரஜினி லஞ்சம் கொடுத்து அத்தி வரதரை தரிசித்தார் என்றோ, யாரிடம் எவ்வளவு கொடுத்தார் என்றோ குறிப்பிடவில்லை. 

செய்தியின் ஒரு இடத்தில், “பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகை நயந்தாரா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட V.V.V.V.V.V.V.V.I.P பிரமுகர்கள் அத்தி வரதர் சிலை முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து, 10 நிமிடம், 15 நிமிடம் தரிசனம் செய்தார்கள். இப்படி தரிசனம் செய்ய அர்ச்சகருக்கு ரூ10,000/-, ரூ20,000 கொடுக்கப்பட்டது” என்று இருந்தது.

Rajini 5.png

10-15 நிமிடங்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அர்ச்சகர்களுக்கு ரூ.10,000, ரூ.20,000 வழங்கப்பட்டது என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். அது லஞ்சமா, தட்சணையா, சிறப்பு தரிசன கட்டணமா என்று எதையும் குறிப்பிடவில்லை. வி.ஐ.பி தரிசனத்தில் வந்தவர்கள் பணம் கொடுத்தார்கள் என்று பொதுப்படையாகவே கூறப்பட்டுள்ளது. அது லஞ்சமாகவே இருந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் லஞ்சம் கொடுத்துதான் தரிசனம் செய்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அடுத்ததாக, ரஜினிகாந்த் பெயர்தான் உள்ளது. ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரத்தையோ, சாட்சியையே, புகைப்படத்தையோ, வீடியோவையோ ஏஷியா நெட் தமிழ் வழங்கவில்லை.

ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தாரா என்று ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ ரியாசை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், “அவர் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்… ரஜினிகாந்த் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய வதந்திகள் பரவுகின்றன. அதில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்” என்றார்.

மக்கள் செய்தி மையம் வெளியிட்டிருந்த செய்தியில், ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளனரா என்று ஆய்வு செய்தோம். Anbu Azhagan என்பவர் இந்த செய்தியின் புகைப்பட வடிவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அப்படி எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்பதற்கு நேரடியான குற்றச்சாட்டு, ஆதாரம் எதையும் ஏஷியா நெட் தமிழ் வழங்கவில்லை.

சிறப்பு தரிசனம் செய்ய வருபவர்கள் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணமா, தட்சணையா என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது லஞ்சம் என்று எப்படி முடிவு செய்யப்பட்டது என்று செய்தியில் விளக்கம் இல்லை.

ரஜினிகாந்த் பெயருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் பலரது பெயரும் குறிப்பிட்டுள்ளனர். தமிழக முதல்வரிடமே லஞ்சம் வாங்கும் அளவுக்கு தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த்தின் பி.ஆர்.ஓ-விடம் பேசியபோது இந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் செய்தி மையம் வெளியிட்டுள்ள செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எந்த ஒரு ஆதாரமும் இன்றி அத்தி வரதரை தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்புக்காக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •