காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

காஷ்மீரில் பால் வாங்க, குழந்தையோடு சென்றவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்ட முதியவர் உடல் மீது அவரது பேரன் ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “காஷ்மீரில் வாழ்க்கை. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்திய அரச படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தையின் உடல் மீது அமர்ந்திருக்கும் மூன்று வயது சிறுவன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத்தகவலில், “காஷ்மீரில் பால் வாங்க குழந்தையோடு சென்றவரை சுட்டுக்கொலை செய்துள்ளது இந்திய ராணுவம்!! ராணுவத்திற்கும், தீவிரவாதிக்கும் இடையே நடந்த சண்டையில், தீவிரவாதி சுட்டுக்கொலைனு நாளைக்கு செய்தி வரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Gorky Dhivakra என்பவர் ஜூலை 1, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜூலை 1ம் தேதி காஷ்மீரில் சோபோர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் அறிந்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்றனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவரும், பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. 

nakkheeran.inArchived Link

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த முதியவர் பஷீர் அகமது கான் (65) உடல் மீது மூன்று வயது சிறுவன் ஏறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்திருந்தது. பஷீர் அகமதுவை பயங்கரவாதிகள் சுட்டதாக காஷ்மீர் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

Archived Link

காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட ட்வீட் பதிவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த முதியவரும், சி.ஆர்.பி.எஃப் வீரரும் இறந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் காயம் அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஃபேஸ்புக் பதிவாளர் சந்தேகம் எழுதிப்பிது போல, யாரும் இறந்த நபர் பயங்கரவாதி என்று கூறவே இல்லை. மேலும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூட இந்த விஷயத்திலும் கூட பாதுகாப்பு படையினர் விளம்பரம் தேடவே முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தார். 

ஆனால், அதன் பிறகு பாதுகாப்புப் படையினர்தான் முதியவரை சுட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதியவர் சென்ற காரில் சிறு கீறல் கூட இல்லை. தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போது அவர் எப்படி அங்கே செல்வார்? அவரை காரில் இருந்து இறக்கி மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வீடியோ உண்மையில்லை, சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்று சோபோர் போலீஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived Link

மேலும் உயிரிழந்த பஷீர் அகமதுவின் குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டையும் பாதுகாப்புப் படையினர் மறுக்கின்றனர். இது குறித்து சி.ஆர்.பி.எஃப் கூடுதல் தலைமை இயக்குநர் ஜுல்பிகர் அலி இது குறித்து கூறுகையில், “எங்கள் தரப்பில் ஒருவரை இழந்திருக்கிறோம். காலை தொழுகைக்குப் பிறகு பயங்கரவாதிகள் மசூதியைக் கைப்பற்றினார்கள். சி.ஆர்.பி.எஃப் அங்கு சென்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது கார் ஒன்று கடந்து சென்றது. அதனால் அவரை பயங்கரவாதிகள் தாக்கியிருக்கக் கூடும் என்று புரிந்துகொண்டோம். சி.ஆர்.பி.எஃப் அவரை சுடவோ, இழுத்துப் போடவோ இல்லை. ஒரு வேளை துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் காரை நிறுத்திவிட்டு எங்காவது பாதுகாப்புக்கு ஓட அவர் முயற்சி செய்திருக்கலாம். அந்த நேரத்தில் அவரை தீவிரவாதிகள் சுட்ட குண்டு அவர் மீது பாய்ந்திருக்கலாம். அவர் இறந்து கிடந்த இடத்திற்கு வெகு தொலைவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருந்தார்கள். ஆனால் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அவர்களைக் கொன்றுவிட்டதாக கதை கட்டுகிறார்கள்” என்றார்.

bbc.comArchived Link

இது தொடர்பாக ஸ்க்ரோல் என்ற ஊடகம் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மக்களுடன் பேசி கள ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்ததை யாராவது பார்த்தார்களா என்று அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளது. அதற்கு ஒருவரும் “நேரில் பார்க்கவில்லை, துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் வீட்டுக்குள்ளே கதவை பூட்டிக்கொண்டு இருந்தோம்” என்று கூறியுள்ளனர்.

அந்த பகுதியில் கடை வைத்திருந்த பெயர் வெளியிடாத ஒருவர், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பார்க்கவில்லை. ஆனால், முதியவரும், குழந்தையும் சாலையில் நடந்து வருவதை பார்த்தேன். அவர்கள் காரில் வந்ததை நான் பார்க்கவில்லை. ஒருவேளை ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க காரை நிறுத்திவிட்டு அவர் பேரனை அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் யார் சுட்டதில் அவர் இறந்தார் என்றும் தெரியவில்லை.

scroll. inArchived Link

முதியவர் இறந்து கிடந்த நிலையில் யாரும் குழந்தையைப் பற்றி கவலைப்படவே இல்லை. துப்பாக்கிச்சூடு முடிவுறும் நிலையில் தான் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குழந்தை அருகில் வந்தனர். குழந்தையை ஓரமாக வரும்படி கூறினார்கள். ஆனால் அதை அந்த குழந்தையால் புரிந்துகொள்ள முடியவில்லை.  துப்பாக்கிச்சூடு எல்லாம் முடிந்த பிறகே குழந்தையை அவர்கள் தூக்கினார்கள்” என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில்,

இறந்து கிடக்கும் பஷீர் அகமது சிறுவனின் தந்தை இல்லை, தாத்தா.

பயங்கரவாதிகளுடனான மோதலின் போது முதியவர் பஷீர் அகமதுவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஊடகங்களிலும் பஷீர் அகமதுவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவே செய்தி வெளியாகி உள்ளது.

இறந்தவரின் குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம்சாட்டுகின்றனர். 

அதே நேரத்தில், பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. பஷீர் அகமது நடந்து வந்தார் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பஷீர் அகமதுவை பாதுகாப்புப் படையினர்தான் சுட்டுக் கொன்றார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் சுட்டுக்கொல்லவில்லை என்று போலீசும் விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் காஷ்மீரில் பால் வாங்க குழந்தையுடன் சென்ற தந்தையை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

Fact Check By: Chendur Pandian 

Result: False