Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?
18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க... 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட குழந்தை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவை விக்னேஷ் ஆன்மீக அரசியல் என்ற ஐடி கொண்ட நபர் 2020 ஜூன் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும் போது தாயை நோக்கி குழந்தை செல்வது போல உள்ளது. சுற்றிலும் மருத்துவர்கள் உள்ளனர். எனவே, பார்க்க பெற்றோரை பிரிந்திருந்த குழந்தை என்று கூறுவது நம்புவது போல உள்ளது. இருப்பினும் இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.
குழந்தையின் பெயர், ஊர் என எந்த தகவலையும் அளிக்கவில்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த படத்தை வைத்து இந்தி உள்ளிட்ட வேறு வேறு மொழிகளில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அனைத்திலும் 18 நாட்கள் தனிமையில் இருந்த குழந்தை என்ற வகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீண்ட தேடலுக்குப் பிறகு கோரக்பூர் நியூஸ் ஆன்லைன் என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், "இந்த சிறுமி உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்ற நிலையில் வீடு திரும்புவதாகவும் செய்தி கிடைத்தது. மேலும், இந்த சிறுமியின் பெற்றோர் மும்பையில் வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான உ.பி மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். கடந்த மே 13ம் தேதி சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. ஆனால், பெற்றோருக்கு கொரேனா இல்லை.
இதனால், குழந்தையை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வயது சிறுமியை தனிமையாக வைத்திருப்பது இயலாத காரியம் என்பதால், உயர் அதிகாரிகளுடன் பேசி, குழந்தையின் தாயும் உடன் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் தாயும் குழந்தையும் இருந்துள்ளனர். 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு கொரோனா நெக்டிவ் என்று வந்துள்ளது. தாய்க்கும் கொரோனா தொற்று இல்லை. எனவே, அவரை வீட்டுக்கு அனுப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து தேடியபோது, இந்த சிறுமி சித்தார்த்நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது உறுதி செய்யப்பட்டது. சிறுமியின் படத்தை மாவட்ட மாஜிஸ்திரேட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. மே மாதத்தில் அந்த சிறுமிக்கு பரிசு வழங்குவது போன்ற படத்தை அவர் வெளியிட்டிருந்தார். ஜூன் 3ம் தேதி அந்த சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று படத்தை அவர் வெளியிட்டிருந்தார். மேலும், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம், இந்த சிறுமி தனியாக சிகிச்சை பெறவில்லை, பெற்றோரும் குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில், இந்த ஃபேஸ்புக் பதிவு வாசகர்களை குழப்பக்கூடியதாக உள்ளதென்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Misleading