
குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.1000ம் வழங்கும் திட்டம் சாத்தியமில்லாதது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது போன்ற படத்துடன் கூடி செய்தி ஊடகம் ஏதோ ஒன்று வெளியிட்ட இணைய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “குடும்ப அட்டைக்கு ரூ. 1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு மேல், “திமுக வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு இறுதியில் கிடைப்பது நமக்கு நாமமே” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை ChandraMouli Balakrishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 12ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
2021 சட்டமன்ற தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000ம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்று கூறியிருந்தார். இந்த செய்தியை கடந்த ஜூலை 9, 2021 அன்று நியூஸ் 18 உள்ளிட்ட பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
இந்த சூழலில், ரூ.1000ம் வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலக பகிரப்பட்டு வருகிறது.
இந்த தலைப்பை டைப் செய்து தேடினோம். அப்போது இந்த செய்தியை செய்திப்புனல் என்ற இணைய ஊடகம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக விஷமத்தமான தலைப்புகளை இது போன்ற இணைய ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம்தான். சமூக ஊடகங்களில் பலரும் இதை பரபரப்பாக ஷேர் செய்யவே செய்திப் புனல் தன்னுடைய தலைப்பை மாற்றியிருந்தது.
ஆனால், டெய்லி ஹண்ட் தளத்தில் வெளியான செய்தியில் “குடும்ப அட்டைக்கு ரூ. 1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு..!” என்று தலைப்பு மாறாமல் இருந்தது.

அசல் பதிவைக் காண: seithipunal.com I Archive 1 I Facebook 2 I Archive 2
செய்தியின் உள்ளே பார்த்தோம். எந்த இடத்திலும் அரசு அறிக்கை வெளியிட்டது என்றோ, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் யாராவது தெரிவித்தார்கள் என்றோ குறிப்பிடவில்லை. “அத்திட்டத்தை தற்போது தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது” என்று மொட்டையாக தெரிவித்திருந்தனர். இதன் மூலம் பரபரப்புக்காக போலியான செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணியைத் தொடர்புகொண்டு தகவல் பெற முயற்சி செய்தோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அவருடைய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அமைச்சரின் உதவியாளர், “அது போன்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது முதலமைச்சரின் திட்டம். எனவே, இது தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்பதுதான் சரியாக இருக்கும்” என்று கூறி முதலமைச்சரின் தனி செயலாளரின் தொலைபேசி எண்ணை நம்மிடம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “இது பொய்யான செய்தி. இப்படி எந்த ஒரு அறிவிப்பையும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிடவில்லை” என்றனர்.
நம்முடைய ஆய்வில்,
செய்தி ஊடகம் எந்த ஒரு ஆதாரமும் இன்றி செய்தி வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1000 ரூபாய் வழங்கும் திட்டம் சாத்தியமில்லாதது என்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உறுதி செய்துள்ளோம்.
இதன் அடிப்படையில், ரூ.1000ம் வழக்கும் திட்டம் சாத்தியமில்லாதது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:குடும்ப அட்டைக்கு ரூ. 1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
