பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு விமானத்திலிருந்து நேருவும், இந்திராகாந்தியும் இறங்கியதாகவும் அப்போது ஒருவன் சிறுமி இந்திராவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

சோனியா காந்தி காலில் சிங் ஒருவர் விழும் படத்தில், “முன்னாள் பிரதமரின் நிலை. உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக்கூடாது... ஒ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் உபிஸ்... இதுதான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் நிலை” என்று உள்ளது.

ஃபேஸ்புக் நிலைத் தகவலில், “நேரு விமானத்திலிருந்து தனது மகள் இந்திராவுடன் வந்து இறங்கினார். அவருக்கு வாழ்த்து கோஷமிட்ட கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட இளைஞன் ஒருவன் சிறுமி இந்திராவின் கையை பிடித்து இழுத்தான்.

திரும்பிப்பார்த்த நேருவின் முகம் சிவந்தது. மோசமான வார்த்தைகளால் திட்டியபடி... அவனின் சட்டையை பிடித்து உலுக்கினார்.

அந்த இளைஞன் அலட்சியமாக சிரித்தபடி... "பண்டிட் நேரு, உன் மகளின் கையை தொட்டதையே உன்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை இல்லையா? ஆனால் எனது வயதான தாயை, எனது இளம் மனைவி, எனது இளைய சகோதரியை... பாகிஸ்தான் மனித மிருகங்கள் எங்கள் கண் முன்னால் துணிகளை உருவி சின்னா பின்னமாக்கின.!!அந்த காட்சி.. எங்களைக் கொன்றால் கூட மறக்கமுடியாது.!! அரசை ஆண்ட நீங்களோ எங்களுக்கு அகிம்சை போதித்தீர்கள்.!! எங்களை காப்பாற்ற துரும்பைக் கூட எடுத்துப்போடாமல்... இந்தியாவில் உள்ள முஸ்லிம்களைப் பாதுகாக்க ஓடினீர்கள்... தூ என காரி உமிழ்ந்தான்.!!” என்று ஒரு செய்தியை சொல்லியிருந்தனர்.

ஆனால், எப்போது நடந்தது, எந்த விமான நிலையத்தில் நடந்தது, கையைப் பிடித்து இழுத்த நபர் யார் என்று எந்த ஒரு விவரமும் இல்லை. இந்த பதிவை K Elayaraja என்பவர் மே 18ம் தேதி வெளியிட்டிருந்தார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதலில் படம் தொடர்பான விஷயத்துக்கு வருவோம். படத்தில் இருப்பது முன்னாள் பிரதமர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சோனியா காந்தியின் காலில் விழுந்த நபர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லை என்று நாம் ஏற்கனவே, ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம். அது தொடர்பாக 2019 மார்ச் 20ம் தேதி வெளியான கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அடுத்ததாக நிலைத்தகவல்...

இதில் எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று கூறவில்லை. இதற்கு ஆதாரம் எதையும் அளிக்கவில்லை. பாகிஸ்தான் என்று குறிப்பிட்டதன் மூலம், சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தது என்பது மட்டுமே நமக்கு கிடைத்த தகவல்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது இந்திரா காந்தி சிறுமி இல்லை. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே அவர் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றிய குறிப்பு கீழே...

இந்திராகாந்தி 1917ம் ஆண்டு பிறந்தவர். 1936ம் ஆண்டு கமலா நேரு காசநோயால் உயிரிழக்கும்போது இந்திரா காந்திக்கு வயது 18. லண்டனில் படித்துக்கொண்டிருந்த இந்திராவுக்கும் ஃபெரோஸ் காந்தியுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் இந்து முறற்படி 1942ம் ஆண்டு நடந்தது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஃபெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திரா காந்திக்கு வயது 30. சுதந்திரத்துக்குப் பிறகு பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, தந்தை நேருவுக்கு உதவுவது என்று இந்திரா காந்தி செயல்பட்டுவந்தார். அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை.

இதுபோன்ற சம்பவம் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் அப்படி எங்கும் இல்லை.

INDIRA 2.png

சுதந்திரத்துக்குப் பிறகு அகதிகளாக வந்த மக்களுக்கு உதவி செய்யும் பணியை காந்தியடிகளுடன் இணைந்து இந்திரா காந்தி மேற்கொண்டார் என்று இந்து தமிழில் வெளியான ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில்,

1) சோனியா காந்தி காலில் மன்மோகன் சிங் விழுந்தார் என்ற படம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

2) இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திரா காந்திக்கு வயது 30. அவர் சிறுமி இல்லை.

3) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.

4) நம்முடைய தேடலிலும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பிரிவினையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விமானநிலையம் வந்த சிறுமி இந்திரா காந்தியின் கையைப் பிடித்து இழுத்தார் என்றும் இதனால், நேரு கோபமடைந்து அவரை திட்டினார் என்றும் கூறப்படும் பதிவு பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி!

Fact Check By: Praveen Kumar

Result: False