சோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங்?

அரசியல்

காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போது, அவரது காலில் தலைப்பாகை கட்டிய ஒருவர் விழுந்து ஆசிபெற்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘முன்னாள் பிரதமரின் நிலை உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக் கூடாது’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதை 2200க்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்திருந்தனர். உண்மையில் சோனியா காந்தியின் காலில் மன்மோகன் சிங் விழுந்தாரா என்று ஆய்வு செய்தோம். அதன் விவரம் உங்களுக்காக.

வதந்தியின் விவரம்:

முன்னாள் பிரதமரின் நிலை உலகத்தில் எந்த ஜிவராசிக்கும் வர கூடாது

Archive link

புகைப்படத்தில், சோனியா காந்தியின் காலில் ஒருவர் விழுகிறார். அதை அருகில் நின்றுகொண்டிருக்கும் ராகுல் காந்தி பார்த்துச் சிரிக்கிறார். காலில் விழுந்த நபர், சீக்கியர் போன்று தலைப்பாகை அணிந்திருக்கிறார். அதனால், அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.  இதை உண்மை என்று நம்பி, 2200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க இருந்தார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி இந்திய பிரதமர் ஆகக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், வேறு வழியின்றி மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார் சோனியா காந்தி. இதுபற்றி 2004ம் ஆண்டு தி சியாட்டில் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மன்மோகன் சிங் அதிகம் பேசாதவர். மென்மையான நபர். இதனால், செயல்படாத பிரதமர், சோனியா காந்தியின் கை பொம்மை என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் அவரை தாக்கி வந்தன. இதுதொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள். அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் கூட செயல்படாத பிரதமர் என்று அட்டைப்படமே வெளியிட்டது. இதுதொடர்பாக விகடன் இணையத்தில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வாறு மன்மோகன் சிங் மீது கடுமையான விமர்சனம் இருந்தபோதிலும், தொடர்ந்து 2வது முறையாக, 2009-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அவர் மீண்டும் பிரதமர்  ஆனார். வெற்றிகரமாக, 2வது முறையும் பிரதமர் பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.  இதையடுத்து, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும், மன்மோகன் சிங்கையே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதன்பின், புதிய பிரதமராக பதவியேற்ற மோடியையும் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டு ஃபேஸ்புக்கில் கூட பலவித பதிவுகள் வெளியாகின. ‘மோடி பேச்சில் வல்லவர், செயலில் அதிரடியானவர்; மன்மோகன் சிங் வாய் பேச தெரியாதவர்,’ என்றும்கூட பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். மோடியின் பதவிக் காலமும் தற்போது முடிவடைய உள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தியின் காலில் தலைப்பாகை கட்டிய ஒருவர் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை சோதிக்க, yandex.com-ல் தேடினோம். அதில், புகைப்படம் உண்மையானதுதான் என்று உறுதியானது மட்டுமின்றி, படத்தின் உண்மை விவரம் பற்றியும் நமக்கு கிடைத்தது.

அதன்படி, புகைப்படங்களை விற்பனை செய்யும் gettyimages.com என்ற இணைய தளத்தில் இருந்து, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், எங்கே, எப்போது, யாரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் இருந்தன.

அதில், 2011ம் ஆண்டு டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திக்க சோனியா காந்தி வந்திருந்தார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி ஒருவர்  (பெயர் குறிப்பிடப்படவில்லை) சோனியா காந்தி காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலில் விழுந்த நபர் மன்மோகன் சிங் என்று குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை அவர் மன்மோகன் சிங்காக இருந்திருந்தால், அப்போதே அது மிகப்பெரிய செய்தியாக வைரல் ஆகியிருக்கும். ஆனால், சோனியா காந்தி காலில் மன்மோகன் சிங் விழுந்ததாக எந்த பதிவும் இல்லை. இது தொடர்பாக அப்போது வெளியான  ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மன்மோகன் சிங் புகைப்படங்களை கூகுளில் தேடிப்பார்த்தோம். இதில் கிடைத்த மன்மோகன் சிங்கின் எல்லா புகைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது அவரது தலைப்பாகையின் நிறம்.  நீல நிற தலைப்பாகை அணிவதை மட்டுமே மன்மோகன் சிங் வழக்கமாக கொண்டுள்ளார். சோனியா காந்தி காலில் விழுந்தவரோ, ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருக்கிறார்.

“எனக்கு பிடித்த நிறம் நீலம். அதனால்தான் நீல நிற தலைப்பாகை அணிகிறேன்” என்று 2006ம் ஆண்டு மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இது தொடர்பான செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.  

இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டவரின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை சி.ஆர்.பிரகாஷ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் தன்னைப் பற்றியோ, தான் சார்ந்துள்ள அமைப்பைப் பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய பதிவுகள் எல்லாம் தி.மு.க – காங்கிரஸ் எதிர்ப்பு, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடனே இருந்தன.

இதன் மூலம், பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, அவர் அரசியல் விஷம பிரசாரத்துக்காக பயன்படுத்தியிருப்பது தெளிவாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், படத்தில் இருப்பவர் மன்மோகன் சிங் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ, செய்தி எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால் நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Avatar

Title:சோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங்?

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share