
‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகடியாக இருந்தாலும், இது கமல்ஹாசன் பெயரை சொல்லி விஷமத்தனம் பரப்புவதாக உள்ளது என்று, அவரது கட்சியின் தொழிலாளர் பிரிவு நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறியிருந்தார். அதன்பேரில்தான் இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
அத்துடன் மக்கள் நீதி மய்யத்தின் ஐடி பிரிவினரும் இதனை போலியாகச் சித்தரிக்கப்பட்ட தகவல் என்று தெரிவித்துவிட்டனர்.
சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நாமும் ஒருமுறை ஆய்வு செய்தோம். இந்த ட்விட்டர் பதிவில் 2018, பிப்ரவரி 03 என தேதி குறிப்பிட்டுள்ளனர். அப்போது கொரோனா வைரஸ் எங்கேயும் பரவவில்லை. அத்துடன், கமல்ஹாசனின் ஐடி பெயர் உள்ள இடத்தில் Kamal Haasan’s Admin @notthatkamal என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் (@ikamalhaasan) வேறொன்றாகும். அதனை நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் பிரிவு நிர்வாகியும் உறுதி செய்தார்.
உதாரணத்திற்காக, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றை எடுத்து, நாம் ஆய்வு செய்யும் ட்விட்டர் பதிவுடன் ஒப்பிட்டுள்ளோம். அதனை கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கமல்ஹாசன் கொரோனாவைரஸ் பற்றி 2018ம் ஆண்டில் பதிவு எதுவும் வெளியிடவில்லை.
2) அவரது பெயரை பயன்படுத்தி சிலர் விஷமத்தனமாக தகவல் பகிர, அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
3) கமல்ஹாசன் பெயரில் செய்யப்படும் விஷமத்தனம் தவறான செயல் என்று கூறி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் நம்மிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி விஷமத்தனமான வகையில், கமல்ஹாசன் பெயரில் வதந்தி பகிரப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
