கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

அரசியல் தமிழகம்

‘’கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில் கருணாநிதியின் சமாதியில் சில பிராமணர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சமாதியில் ஹோமம். பிராமணர்களை அழைத்து வந்து திமுக அசத்தல். பகுத்தறிவு ஹோமம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, உண்மையில் கருணாநிதி சமாதியில் யாகம் எதுவும் நடத்தப்பட்டதாகக் கூறி செய்தி எதுவும் வெளியாகியுள்ளதா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, இந்த பதிவு பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அவரது உதவியாளர் ஒருவர், ‘’இதுபோல நிறைய வதந்திகளை சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். இதில் உண்மையில்லை. இந்த புகைப்படத்தில் நிற்கும் பிராமணர்களை பார்த்தால், கலைஞர் சமாதியை பார்வையிட வந்த சாமானிய மக்கள் போல உள்ளது,’’ என்றார்.

எனினும், சந்தேகத்தின் பேரில் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதனை ட்விட்டர் பயனாளர் ஒருவர் மார்ச் 18, 2020 அன்று பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. 

Twitter Link

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதியை பார்வையிட வந்த பொதுமக்களில் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அதில், சில பிராமணர்களும் அடங்குவர்.

காலம் முழுக்க பிராமணியத்தை எதிர்த்து வந்த கருணாநிதி சமாதிக்கு சில பிராமணர்கள் வந்தது அங்கிருந்த திமுகவினரையும், சமூக வலைதளங்களில் உள்ள திமுக ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியூட்டியுள்ளது. அதனை சிலர் பாராட்டி பதிவிட, அந்த புகைப்படத்தை எடுத்து, கருணாநிதி சமாதியில் கொரோனா எதிர்ப்பு யாகம் நடந்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False