ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1avatarnews.inArchived link 2

தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க எம்.பி கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தது போல உள்ளது.

இந்த பதிவை, Sankar V என்பவர் 2020 ஜூலை 16ம் தேதி பதிவிட்டுள்ளார். வாட்ஸ்அப்பில் இந்த செய்தி இணைப்பு எதுவும் இல்லாமல் கனிமொழி படம் மட்டும் பகிரப்பட்டு வருகிறது. 

உண்மை அறிவோம்:

செய்திகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்த தகவல் தவறானது என்று தெரியும். இருப்பினும் கனிமொழி, லெட்டர் பேடு, ஸ்டெர்லைட் ஆலையின் பெயர்ப் பலகை உள்ளிட்டவற்றை எல்லாம் பார்க்கும்போது கனிமொழிதான் வலியுறுத்தியுள்ளார் என்று தோன்றும் வாய்ப்பு உள்ளது. வாட்ஸ்அப்பில் செய்தி இணைப்பு எதுவும் இன்றி புகைப்படம் மட்டுமே பகிரப்படுவதால், கனிமொழிதான் மனு அளித்தார் என்று கருதி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தி.மு.க சார்பில் மனு” என்று சமூகஊடகங்களில் டைப் செய்து தேடியபோது செய்தி இணைப்புடன் கனிமொழி படம் பகிரப்பட்டு இருப்பது தெரிந்தது.  எனவே, avatarnews.in என்ற இணையதளம் வெளியிட்ட இந்த செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம்.

செய்தியில், ஊராட்சி மன்றத் தலைவர் அன்புராஜ் என்பவர் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார் என்றும் அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். படத்தில் உள்ளது போல கனிமொழி இந்த ஆலையைத் திறக்க ஏதும் கோரிக்கை விடுத்துள்ளாரா, அது பற்றி குறிப்பிட்டுள்ளார்களா என்று பார்த்தோம். அதில் “ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தி.மு.க எம்.பி கனிமொழி உள்பட தி.மு.க தலைவர்கள் அனைவரும் கடுமையாக போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஊராட்சித் தலைவர் என்பது கட்சி அடிப்படையில் இல்லாத தேர்தல் ஆகும். அதில் போட்டியிடுபவர் கட்சியின் பெயரை, சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்பது இல்லை. (ஆதாரம்: தமிழக உள்ளாட்சித் துறை வெளியிட்ட ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினருக்கான வேட்புமனு) அப்படி இருக்கும்போது ஊராட்சித் தலைவர் ஒருவர் சொன்னதாலேயே அது தி.மு.க-வின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். கட்சியின் மூத்த தலைவர்கள் சொல்வதையே அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லும்போது ஊராட்சித் தலைவர் சொன்னதை எல்லாம் தி.மு.க-வின் கருத்தாக கூறுவது ஏற்புடையதாக இல்லை.

oneindia.comArchived Link

உதாரணத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய பல கருத்துக்களை பா.ஜ.க நிராகரித்துள்ளது. காவிரி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் எல்லாம் அவருடைய சொந்த கருத்து, அது பா.ஜ.க-வின் கருத்து இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் மூத்தத் தலைவரின் கருத்தே சொந்தக் கருத்து என்று மறுக்கப்படும் நிலையில், ஒரு  ஊராட்சித் தலைவரின் கருத்தை தி.மு.க-வின் கருத்து என்று எப்படி குறிப்பிட முடியும் என்று தெரியவில்லை.

maalaimalar.comArchived Link

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கவில்லை. மக்களாக போராடினார்கள். தி.மு.க தலைவர்கள் போராட்டம் நடத்தியது என்று கூறுவதே தவறான தகவல் ஆகும். துப்பாகிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஆலையைத் திறக்கக் கூடாது என்று ஆளும் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதே உண்மை.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் யாரும் கூறவில்லை. அப்படி இருக்கும்போது தி.மு.க மனு செய்தது என்று கூறியிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading