
‘’ஆந்திராவில் முழு மது விலக்கு – ஜெகன் மோகன் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

Archived Link
கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளார். இதன்படி, மே 30ம் தேதி ஆந்திர முதல்வராக அவர் பதவியேற்றுக் கொண்டார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், மே 27ம் தேதியே, அவர் முழு மது விலக்கு அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது நமது சந்தேகத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

எனவே, மே 26 அல்லது 27 தேதிகளில், முதல்வர் பதவியேற்கும் முன்பாக, தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டி எதுவும் அறிவிப்பு வெளியிட்டாரா என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. இதன்பேரில், தீவிர தேடுதல் நடத்தினோம். இதன் முடிவாக, ஜீ பிசினஸ் வெளியிட்ட செய்தி ஒன்றின் விவரம் கிடைத்தது. அதில், மே 26ம் தேதி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெகன், 30ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும், மதுவிலக்கை அமல்படுத்துவது உறுதி எனக் கூறியதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், 2024ம் ஆண்டில்தான் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என தெரியவருகிறது.
தற்போதைய சூழலில், சட்டவிரோதமாக இயங்கும் மது விற்பனை கடைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி என்டிடிவி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆந்திராவில், மூன்று கட்டங்களாக மதுவிலக்கை அமல்படுத்த ஜெகன் திட்டமிட்டுள்ளார் என்றும், தற்போது முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதுபற்றி தி வீக் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ஆனால், இந்த 3 கட்டங்களை முழுதாக நிறைவேற்றி முடிக்க எப்படியும் 2024ம் ஆண்டு ஆகிவிடும், என்றே ஆந்திர அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
நாம் ஆய்வு செய்யும் பதிவில் ஜெகன் வாக்குறுதி, ஜெகன் அறிவிப்பு என எதுவும் சொல்லாமல், ஆந்திரா முழு மதுவிலக்கு – ஜெகன் அதிரடி என்று மட்டும் கூறியுள்ளனர். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று உறுதி அளித்ததாகக் கூறப்படும் ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் தொடர்பான பதிவு என்பதால் இது வைரலாக பகிரப்பட்டு வருவதாக, உணர முடிகிறது.

Title:ஆந்திராவில் முழு மது விலக்கு அறிவித்தாரா ஜெகன் மோகன் ரெட்டி?
Fact Check By: Parthiban SResult: True
