
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியின் மகள் ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இறந்த குழந்தை ஒருவரின் படம் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்க்கும் அப்ரிடி படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர்.
நிலைத் தகவலில், “my favourite cricketer சாகித்அப்ரிடி. புகழ் பெற்ற மிகுந்த மனிதாபிமானமுள்ள கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின்_மகள் இரத்தப் புற்றுநோயால் மரணம்.. ஆழ்ந்த_இரங்கல்.. 😢😢
பல புற்றுநோயாளிகளுக்கு #பொருளுதவி செய்த #மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது..” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Mrk Ganesh என்பவர் டிசம்பர் 13, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இல்லம் கட்ட நிதி உதவி செய்து வருபவர். அவர் மகள் பற்றி பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை ப்ரீமியர் லீக் போட்டியில் இருந்து விலகி அவர் நாடு திரும்பிய நிலையில் அவருடைய மகள் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் அப்ரிடி மகள் இறந்துவிட்டார் என்று கூறி பதிவிடப்பட்டுள்ளதால் இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு முதலே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அப்போதே இது வதந்தி என்று செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive 1 I deccanchronicle.com I Archive 2
மேலும், 2016ம் ஆண்டில், தன்னுடைய மகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் 2016ம் ஆண்டு அப்ரிடி கூறியிருந்த தகவலும் நமக்குக் கிடைத்தது.
தற்போது பலரும் அப்ரிடி மகள் உடல்நலம் பற்றிப் பதிவிடவே, மன வேதனையுடன் அப்ரிடி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது. டிசம்பர் 5ம் தேதி அவர் வெளியிட்டிருந்த பதிவில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே, என்னுடைய மகள்கள் என் அருகிலேயே இருக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இந்த ஆசிர்வாதங்களுக்காக நன்றி அல்லா” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: Twitter I Archive 1 I Instagram I Archive 2
மேலும் மகள் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அப்ரிடி மறுத்துள்ளார் என்றும் தன்னுடைய மகள் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அவர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அசல் பதிவைக் காண: geosuper.tv I Archive 1 I thesubeditor.comI Archive 2
இதன் மூலம் அப்ரிடி மகள் இறந்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் மகள் இறந்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி மகள் மரணம் என்று மீண்டும் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
