சீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

சீமானின் “திருப்பி அடிப்பேன்!” என்ற புத்தகத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாசிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Seeman 2.png
Facebook LinkArchived Link

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சீமானின் “திருப்பி அடிப்பேன்!” என்ற புத்தகத்தை வாசிப்பது போல புகைப்படம் உள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் இல்லாத இடமே இல்லடா##தம்பிகளா வாங்க காவிகளை கதற விடுவோம்##” என்று உள்ளது.

இந்த பதிவை, சீமான் நாம் தமிழர் கட்சி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Pradeep Kumar‎ என்பவர் 2019 அக்டோபர் 8ம் தேதி வௌியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. 

நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து சீமான் பேசியபோது, “நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் நான் சொன்னதைத்தான் ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார். காவலர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்து அதை செயல்படுத்தியுள்ளார். என்னுடைய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார் போல” என்றார்.

Youtube LinkArchived Link 1
hindutamil.inArchived Link 2

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி சீமானின் புத்தகத்தை படிப்பது போன்ற புகைப்படம் நாம் தமிழர் கட்சியினரின் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழ் படிக்கத் தெரியுமா, சீமானின் புத்தகம் – தேர்தல் அறிக்கையை அவர் படித்தார், அந்த திட்டங்களைத்தான் அவர் ஆந்திர பிரதேசத்தில் செயல்படுத்தி வருகிறாரா என்று நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. உண்மையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருப்பி அடிப்பேன் புத்தகத்தை ஜெகன் மோகன் ரெட்டி படிக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு நடத்தினோம்.

புகைப்படத்தைப் பார்க்கும்போது ஆந்திர சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளது போல உள்ளது. மேலும், விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகம் சைஸ் மிகவும் பெரியதாக இருந்தது. இதனால், ஆர்வமிகுதியால் இந்த படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதை உறுதி செய்ய,  இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

Seeman 3.png
Search Link

சில ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. ஜெகன் மோகன் ரெட்டி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது தெரிந்தது. ஆந்திர அரசு சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு அளிக்கும் மானியக்கோரிக்கை புத்தகம் அல்லது அறிவிப்பு புத்தகம் போல அது இருந்தது. அட்டையில் தெலுங்கில் எழுதப்பட்டு இருந்தது. 

இதன் மூலம், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளரின் திருப்பி அடிப்பேன் புத்தகத்தை ஜெகன் மோகன் ரெட்டி வாசிப்பது போன்ற புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்று உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

Fact Check By: Chendur Pandian 

Result: False