‘’கொரோனா காரணமாக, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒரு மொபைல் எண்ணை கொடுத்து, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை அனாதையாக உள்ளதென்றும், அவர்களின் பெற்றோர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதால், தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில், கொரோனா பெயரை பயன்படுத்தி ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வதந்திகளில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட செய்தியும். உண்மையில், அதில் தரப்பட்டுள்ள +919718798777 என்ற எண்ணை தொடர்பு கொண்டோம். ஆனால், பல முறை முயற்சித்தும், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே நமக்கு தகவல் கிடைத்தது.

இதற்கு அடுத்தப்படியாக, தொடர்ந்து தகவல் தேடியபோது, ஏற்கனவே இந்த தகவல் ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பரவி, தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஷேர் செய்யப்படுவதைக் கண்டோம்.

ஆம். ஆங்கிலம், இந்தியில் பரவிய தகவலை உண்மை என நம்பி, ஏற்கனவே ஒருவர் ட்விட்டரில் இந்த தகவலை முதலில் பகிர்ந்திருக்கிறார். இதன்பேரில், ஏராளமானோர் மொழி பெயர்த்து, தங்களது மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டரில் மே மாத தொடக்கத்தில் பகிரப்பட்ட அந்த பதிவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

ஆனால், ட்விட்டரில் குறிப்பிட்ட தகவல் பகிர்ந்தவர் மற்றும் அவரது பின்தொடர்பாளர்களே சில நாட்கள் கழித்து, ‘தொடர்ச்சியாக முயற்சித்தும், இந்த எண்ணை தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே, இந்த செய்தி நம்பகமானது இல்லை; தவறானது. அந்த குழந்தைகள் யார், அடையாளம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை,’ என்று, விளக்கம் அளித்து, கமெண்ட் செய்திருக்கின்றனர்.



எனவே, இந்த வதந்தி பல்வேறு மொழிகளிலும் பரவி வருகிறது என்றும், இது உண்மையில்லை என்றும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. இதுபோன்ற தலையும் இல்லாத, வாலும் இல்லாத தகவல்களை சமூக வலைதளங்களில் காண நேரிட்டால், அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தபின், அதனை மற்றவர்களுக்கு பகிருங்கள். குறிப்பாக, குழந்தைகள் பற்றிய பிரச்னைகள், புகார்களுக்கு Child Helpline 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இப்படி வெறுமனே தகவலை ஷேர் செய்வதால் குழந்தைகளை காப்பாற்றிவிட முடியாது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்க என்று பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: False