
தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
கனிமொழி படம் மற்றும் நியூஸ்7 தமிழ் நியூஸ்கார்டை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வேண்டும் – எம்.பி கனிமொழி” என்று உள்ளது.
இந்த பதிவை, Ramaprabha Rajagopalan என்பவர் 2019 நவம்பர் 17 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஒரு மதம், சாதி பற்றி யார் எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும் அதை பா.ஜ.க-வின் எச்.ராஜா கூறினார் என்றோ தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி கூறினார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்து கோவில்களில் உள்ள சில சிலைகள் பற்றி திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வருத்தம் தெரிவித்து அவர் விளக்கம் அளித்துவிட்டார். ஆனாலும் அதை ஏற்கமாட்டோம் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
திருமாவளவன் கூறிய விஷயத்தை எடுத்து, எடிட் செய்து அதை தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுவும் மிகவும் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் நிலைத்தகவல், கமெண்ட்டுடன் பகிரப்பட்டு வருகிறது. எனவே, அந்த நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், நவம்பர் 15, 2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து கோவில்களில் உள்ள சிலை பற்றி நவம்பர் 15ம் தேதி கனிமொழி பேட்டி ஏதும் அளித்துள்ளாரா, நியூஸ்7 தமிழில் ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். கூகுளில் இந்த நியூஸ் கார்டில் இடம் பெற்ற வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். கனிமொழி கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியதாக மட்டுமே செய்தி கிடைத்தது.
Archived Link | Search Link |
இது குறித்து நியூஸ் 7 தமிழ் ஆன்லைன், சமூக ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு குறித்து கேட்டோம். அதற்கு அவர்கள், “இது போலியான நியூஸ் கார்டு. நியூஸ்7 தமிழ் லோகோவோடு தி.மு.க எம்.பி கனிமொழி பற்றி தவறாக பகிரப்படும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நாங்களே பதிவிட்டுள்ளோம்” என்றனர். அந்த நியூஸ்கார்டை அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தோம்.
Archived Link |
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வேண்டும் என்று கனிமொழி கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை அகற்ற வேண்டும் என்று கனிமொழி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
