வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கனிமொழி?- வைரல் வீடியோ

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’பணம் கொடுத்த கனிமொழி, தேர்தல் ஆணையம் பார்வையில் படும் வரை பகிருங்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்குகிறார். எங்கே, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

இந்த வீடியோவை அமாவாசை என்ற ஃபேஸ்புக் குழு ஏப்ரல் 3ம் தேதி பதிவேற்றியுள்ளது.  கனிமொழி பணம் தரும் வீடியோ அனைவருக்கும் அனுப்புங்கள் தேர்தல் கமிஷன் பார்வைக்கு படும் வரை” என்று மட்டும் பகிரப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு கனிமொழி சார்பில் பணம் வழங்கப்படுவது போல் உள்ளது. இதனால், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர் தரப்பினர் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மிகப்பெரிய குற்றம். இவ்வளவு வெளிப்படையாக பணம் கொடுக்கிறார்களே என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய, இது தொடர்பாக வேறு என்ன வீடியோ பகிரப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது, இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் செய்திகள் கிடைத்தன.

இந்த தேடலில், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜே–வில் வெளிவந்த வீடியோ பதிவு நமக்கு கிடைத்தது. அதுவும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலாவதற்கு முன்பு, மார்ச்  3-ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றோ, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது என்றோ கூறவில்லை.

தூத்துக்குடியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.2000ம் வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், “ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதாக வீடியோ வெளியானது. இந்த நிலையில் தூத்துக்குடிக்கு வந்த கனிமொழிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அவர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது…

Archived link

இந்த வீடியோவை நியூஸ் ஜே கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி பதிவேற்றியுள்ளது.

KANIMOZHI 3.png

நியூஸ்ஜெ செய்தியில் கிராமசபை கூட்டம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. நம்முடைய தேடலிலும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த கனிமொழி என்று பல வீடியோக்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதனால், எப்போது இந்த கிராமசபை கூட்டம் நடந்தது என்று தேடினோம்.

கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக பதிவு ஏதேனும் வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளதுபோன்று சிவப்பு நிற புடவை அணிந்து கனிமொழி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற படங்கள் கிடைத்தன. இதில், கனிமொழி அருகில் அனிதா ராதாகிருஷ்ணனும் இருக்கிறார். இதன் மூலம், மேற்கண்ட வீடியோ 2019 பிப்ரவரி 27ம் தேதி எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

Archived link

நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் 10ம் தேதிதான் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றுதான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

கனிமொழி பணம் கொடுத்தது தொடர்பாக அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. கனிமொழியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரிக்காமல் பழைய வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சர்ச்சையும் எழுந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும். இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டு, வாக்காளர்களுக்கு கனிமொழி பணம் கொடுத்தார் என்று தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோ தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபற்றி தகவல் தவறானது. நமது வாசகர்கள் யாரும், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கனிமொழி?- வைரல் வீடியோ

Fact Check By: Praveen Kumar 

Result: False