
மிஷனரிகள் தொல்லை தாங்க முடியாமல் இயேசு இந்துவாக மதம் மாறினார் என்று கனிமொழி பேட்டி அளித்ததாக நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தி.மு.க எம்.பி கனிமொழி பேட்டி என்று உள்ளது. அதன் கீழ், இந்து கோவிலில் இயேசு சிலை இருப்பது போன்ற படத்தை சிறியதாக வைத்துள்ளனர். அந்த சிலையின் கீழ், “ஶ்ரீ இயேசு” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தின் பக்கத்தில், “மிசனரிகள் தொல்லை தாங்காமல் இயேசு கிரிஸ்து ஹிந்துவாக மதம் மாறினர் “ என குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டில் ஜூன் 9, 2019 10.55AM என்று தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டை True Or Fake என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 6ம் தேதி வெளியிட்டுள்ளனர். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டு பார்க்க நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டைப் போல இருந்தாலும், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான பதிவு என்பதாலும் பலரும் இதைப் பகிர்ந்திருப்பது தெரிந்தது. ஆனால், நியூஸ் 7 தமிழ் வெளியிடும் இந்த நியூஸ் கார்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு கீழே…
உள் புகைப்படத்தின் அளவு மாறுபட்டு இருந்தது. ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. இதனால், இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போதே இது போலியானது என்றும் பொய்யாக மார்ஃபிங் செய்யப்பட்டது போல தெரிந்தது.
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் நியூஸ் கார்டை எடுத்து, ஒரு கட்சியின் மூத்த தலைவர் பெயரில் செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் இதை நகைச்சுவைக்காக செய்திருக்கிறார்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை உண்டாக்கும் வகையில் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது புரிந்தது.
இந்த நியூஸ் கார்டின் உண்மையான பதிவை கண்டறிய நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது ஜூன் 9ம் தேதி கனிமொழி பேட்டி தொடர்பாக ஒரு நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது தெரிந்தது.
அதில் இந்தி மொழி திணிப்பு தொடர்பான கருத்தை அவர் தெரிவித்திருந்தார். அதை நீக்கிவிட்டு, இயேசு மதம் மாறினார் என்று விஷமத்தனமாக சேர்த்துள்ளது உறுதியானது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுக்கு பலர் கமெண்ட் செய்திருந்தனர். அதில், ஒருவர் பதிவில் உள்ள ஶ்ரீஇயேசு சிலையின் படத்தைத் தனியாக அளித்திருந்தார். ஆனால் அது கிறிஸ்தவ ஆலயத்தில் இப்படி வைக்கப்பட்டுள்ளதா அல்லது இந்து கோவில் வைக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை அளிக்கவில்லை.

இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் சிலர் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தது தெரிந்தது.

அதில், Hindu Saint என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், “இவர் (ஶ்ரீ இயேசு, ஜீசஸ்) தன்னுடைய சொந்த மக்களாளேயே சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் இந்துமதம் அவருக்கு அமைதியையும் ஆறுதலையும் அளித்தது. அதனால் அவர் இந்து மதத்திற்கு மதம் மாறிவிட்டார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், இந்த படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. Hindu Saint என்ற ட்விட்டர் பக்கத்திலும் இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலை அளிக்கவில்லை.
நம்முடைய தேடலில்,
நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டும் மேற்கண்ட ஃபேஸ்புக் படத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது.
கனிமொழி அளித்த பேட்டி தொடர்பான உண்மையான நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை மார்ஃபிங் செய்து மாற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் மேற்கண்ட பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“இந்துவாக மதம் மாறிய இயேசு” – கனிமொழி பேட்டி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
