
பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
முஹம்மது ஃபாரூக் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இதில், ஒரு நடுத்தர வயது ஆணின் மடியில், இளம்பெண் ஒருவர் அமர்ந்து கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்து, அடத் து, என எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையானதா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், அதில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என முதலில் கண்டறிய தீர்மானித்தோம். இதன்படி, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதே புகைப்படத்தை, ஃபேஸ்புக்கில் Shabana Khatun என்பவர் கடந்த மார்ச் 7, 2019 அன்று பகிர்ந்திருக்கிறார். அதில், இந்திய கலாசாரம் என்று சொல்லி ஏமாற்றும் மதவாதிகளின் அட்டூழியம் பாருங்கள், இதனை உடனே அனைவரும் பகிருங்கள் என்று குறிப்பிட்டும் உள்ளார்.
இதில், அந்த ஆண், பெண்ணின் பெயர் துர்கா வாஹினி, சங் சன்ஸ்கிருடி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை அடிப்படையாக வைத்தே பலரும் இப்படியான தகவலை பகிர்ந்து வருவதாக, தெரிகிறது. ஆனால், இவர்கள் கூறும் எதுவும் இதில் உண்மையில்லை.
மேற்குறிப்பிட்ட புகைப்படங்களில் இருப்பவர்கள் தொழில்முறை நடிகர்கள் ஆவர். இந்தி டிவி சீரியல் ஒன்றின் புகைப்பட காட்சியை எடுத்து, சாமியார்களின் ஜல்சா என்றும், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலாத்காரம் என்றும் கூறி தவறாக சித்தரித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது. குறிப்பிட்ட இந்தி டிவி சீரியல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில்தான் மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு ஆதாரத்திற்காக, அதில் ஒரு காட்சி இங்கே தரப்பட்டுள்ளது.
இதுதவிர, யாரேனும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் சமீபத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்களா என தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதாக, சில செய்திகள் கிடைத்தாலும் அவை அனைத்தும் 2018ம் ஆண்டில் வெளியான செய்திகளாகவே இருந்தன.
இறுதியாக நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபோது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபான்ட் மற்றும் ஆங்கில வார்த்தைகள் மிகவும் மரபு பிழையுடன் இருந்தன. இத்தகைய தவறான தலைப்புச் செய்தியை எந்த ஒரு முன்னணி ஆங்கில ஊடகமும் கவனக்குறைவுடன் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. எதோ ஒரு ஊடகத்தின் நியூஸ் கார்டை பயன்படுத்தி, இவர்களாகவே தவறான ஒரு செய்தியை சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நடைபெறாத சம்பவத்தை அடிப்படையாக வைத்து, முற்றிலும் தொடர்பில்லாத ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
