காமராஜரை அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தரவில்லை: உண்மை என்ன?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

Archived Link

இந்த பதிவு கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றையும், காமராஜர் இறந்தபோது கருணாநிதி பார்வையிட்ட புகைப்படம் ஒன்றையும் சேர்த்து மீம் தயாரித்து பகிர்ந்துள்ளனர். இதன்படி, புதிய தலைமுறை நியூஸ் கார்டில், ‘’மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம்தரலாமா?- திருவாரூர் வலங்கைமானில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கீழே காமராஜர் இறப்பின்போது, கருணாநிதி பார்வையிட்ட புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’அன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி. இன்று அவர்க்கு அளித்த இடம் அதிமுக போட்ட பிட்சை,, காமராஜ் அய்யா ஏழைகளின் மனதில் வாழும் கடவுள்,’’ என்றும் எழுதியுள்ளனர்.

இது உண்மையா, பொய்யா எனத் தெரியாமல், பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 7ம் தேதி திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மரணமடைந்தார். அப்போது, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கும்படி, அவரது மகனும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை தமிழக அரசு நிராகரித்துவிடவே, இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அனுமதி பெற்றார் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக, பிபிசி தமிழ் இணையதளம் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதற்கிடையே, கருணாநிதி உயிரிழக்கும் சில நாட்கள் முன்பாக இருந்தே, அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக்கூடாது என சமூக ஊடகங்களில் காரசார விவாதம் எழுந்தது. அப்போது, சிலர், முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தவர் கருணாநிதி; அவருக்கு எப்படி தற்போது மெரினாவில் இடம் தரலாம்? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதை மையமாக வைத்துத்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பேரில், ஃபேஸ்புக்கிலேயே உண்மையை தேடி நாம் ஆய்வு செய்தோம்.

அப்போது, காமராஜர் மரணம் தொடர்பாகவும், அவரது இறுதிச் சடங்கில் கருணாநிதி பங்கேற்ற புகைப்படங்களும், செய்தி ஆதாரங்களும் கிடைத்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

அந்த இணைப்புகளை கிளிக் செய்து பார்த்தபோது, காமராஜரை அடக்கம் செய்ய கருணாநிதி மெரினாவில் இடம் தரவில்லை எனக் கூறப்படுவது ஒரு வதந்தி என்று கூறி, இதுதொடர்பாக, விகடன் இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தனர்.

இதுதவிர, காமராஜர் இறுதிச் சடங்கு பற்றி தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி ஆதாரம் ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.  

இதன்படி, காமராஜர் கடந்த 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை அரசு முறைப்படி, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்து பின்னர், தகனம் செய்ய, நடவடிக்கை எடுத்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான். காமராஜருக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதால், அவரது தங்கையின் பேரன், அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது, அவரது உடலுக்கு தீ வைத்துள்ளார்.

இதுதவிர, காமராஜர் உடலை எளிமையான முறையில் தகனம் செய்ய, காங்கிரஸ் கட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்தபோது, அதை தடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவகம் அருகிலேயே தகனம் செய்ய ஏற்பாடு செய்து, பின்னர் அதே இடத்தில், தமிழக அரசு செலவில், நினைவு மண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. இவை எல்லாம், விகடன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை விரிவாகப் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், காமராஜரின் விசுவாசியாக இருந்த பழ.நெடுமாறன் இதுபற்றி தி இந்து தமிழ் திசைக்கு விரிவான பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், மேற்கண்ட தகவலையே அவரும் உறுதி செய்துள்ளார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். காமராஜரின் இறுதிச் சடங்கில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்பட ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு மேல் ஆய்வு செய்ய இந்த விவகாரத்தில் ஒன்றும் இல்லை. தி இந்து தமிழ் திசை, விகடன் ஆகியவை தமிழகத்தின் பாரம்பரிய, முன்னணி ஊடகங்களாகும். அவற்றில் வெளியிடப்பட்ட செய்தி ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

இதேபோல, மு.க.ஸ்டாலின் திருவாரூரில் பேசியதாகக் கூறப்படும், புதிய தலைமுறை நியூஸ் கார்டு உண்மையான ஒன்றுதான். அதன் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:காமராஜரை அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தரவில்லை: உண்மை என்ன?

Fact Check By: Parthiban S 

Result: False