கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

அரசியல் சமூக ஊடகம்

கேரளாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்

Archived link

கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே,” கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, தமிழில் தகவல் தொழில்நுட்ப பாட நூல்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்காக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது. மேலும், படத்துக்குக் கீழே, “தமிழை சிறப்பிக்கும் கேரள முதல்வரை பாராட்டி பகிருங்கள் தமிழர்களே” என்றும் கூறப்பட்டுள்ளது.

சேகர் செல்லப்பா என்பவர், ‘மிக அருமை. இவர் அல்லவோ மக்கள் முதல்வர்’ என்று குறிப்பிட்டு இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை நடத்தவும் இதற்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கவும் கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டது போல இந்த பதிவு உள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் வெளியிடலாம்… ஆனால், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்களை நியமிப்பது, தமிழில் பாடம் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி இருக்கும்போது இந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று சந்தேகத்தை எழுப்பியது. இது தொடர்பாக, ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம்.

அப்போது, தினமலர் மற்றும் ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தன. இரண்டிலும் ஒரு வரி கூட மாறாமல் அப்படியே செய்தி இருந்தது. தினமலரில் 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதியும் ஏசியா நெட்டில் அதே செய்தி 21ம் தேதியும் வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை வெளியிட்டு, பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, கேரளாவில் மலையாளம் தவிர்த்து தமிழ், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட வேறு சில மொழி வழியிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடங்களை தமிழில் வெளியிட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட, தமிழ் தெரிந்த ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் வெளியிட்டிருந்த அந்த செய்தியில், “மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை நிதி உதவியுடன் கேரள அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஆனால், தமிழக அரசோ, அந்த நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தி உள்ளது” என்று கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் சங்கிதா கூறியிருந்தார்.

சங்கிதாவின் பேட்டிதான் இந்த செய்தியின் முக்கிய விஷயமாக இருந்தது. ஆனால், அவரது பேட்டியில் இருந்து கேரளாவில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை மட்டும் எடுத்துள்ளனர். அதில், தமிழ் வழியில் என்ற விஷயத்தை மட்டும் எடுத்துவிட்டு எல்லா பள்ளி மாணவர்களுக்கும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவு என்று ஃபோட்டோஷாப் மூலம் நியூஸ்கார்டு ஒன்றை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப பாட புத்தகங்கள் தயாரிக்கவும் அவர்களுக்கு பயிற்றுவிக்க தமிழ் தெரிந்த மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட ஆசிரியர்களை நியமிக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது உண்மைதான்.

ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்தப்படுகிறது என்ற தகவல் தவறானது. எனவே, இதில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பாதி உண்மை, பாதி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture