
“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது: வட கொரிய அதிபர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சுப்பிர மணியன் என்பவர் 2019 அக்டோபர் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தொடர் ஏவுகணை, அணு ஆயுத பரிசோதனைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் மட்டுமின்றி அமெரிக்காவுக்கே தலைவலியாக இருந்துவந்தார். வட கொரிய அதிபர், அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பதற்றம் குறைந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நீங்கியது என்று கூற முடியவில்லை. தடைகளை மீறி அவ்வப்போது ஆயுத பரிசோதனையை வட கொரியா நடத்தித்தான் வருகிறது. அப்படிப்பட்ட கிம் ஜாங் உன் இந்திய பிரதமர் மோடியைப் பற்றி சொன்னார் என்று பெருமை பேசுவது எத்தகைய புகழ்ச்சியோ தெரியவில்லை.
BBC Tamil | Archived Link |
2029 என்பது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஆண்டு. தற்போது 2019ம் ஆண்டு தேர்தல் முடிந்துள்ளது. அடுத்து 2024ம் ஆண்டு, அதன் பிறகு 2029ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். இந்த கணக்கை வைத்து வட கொரிய அதிபர் பேசியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், பா.ஜ.க-வினர் மட்டும் 2029 வரை மோடிதான் இந்தியாவின் பிரதமர் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அதன் வெளிப்பாடாகவே மோடி 2029 வரை பிரதமராக இருப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர் என்று எல்லாம் தொடர்ந்து பல செய்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் வட கொரிய அதிபரும் அவ்வாறு கூறியுள்ளார் என்ற பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா, மோடி தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதமராக நீடிக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும் என்று வட கொரிய அதிபர் கூறினாரா என்று தேடினோம்.
கூகுளில், 2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் கூறினாரா என்று தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடக்கவில்லை. குறைந்தபட்சம் மோடி தொடர்பாக ஏதாவது பேசினாரா என்று தேடினோம். அப்போது, கிம் ஜாங் உன் போல தோற்றம் அளிக்கும் நபர் ஒருவர் “எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும்” என்று கூறினார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. உண்மையான கிம் ஜாங் உன் பிரதமர் மோடி பற்றி பேசியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
Search Link | indiatvnews.com | Archived Link |
தொடர்ந்து தேடியபோது பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ், உலகில் மிக நீண்டகாலம் ஆட்சி செய்ய வாய்ப்புள்ள தலைவர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வட கொரிய அதிபர் கிம்முக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தோன்றும் வரை அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது என்று குறிப்பிட்டிருந்தனர்.
அந்த கட்டுரையில், வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலில் பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் நீடிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த இரண்டு செய்திகளைத் தவிர வட கொரிய அதிபரையும் இந்திய பிரதமரையும் இணைக்கும் செய்திகள் வேறு எதுவும் கிடைக்கவில்லை.
business-standard.com | Archived Link |
அதே நேரத்தில் தென் கொரியாவுடன் இந்தியா நெருங்கிய நட்புடன் இருப்பது தொடர்பான செய்திகள் கிடைத்தன. தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் – மோடி இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாட்டுக்கு இடையே கடந்த ஆண்டு 10 புரிந்துணர்வு ஒப்பதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போல எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் நாடுகள் வட கொரியா மற்றும் தென் கொரியா. அப்படி இருக்கும்போது தென் கொரியாவுடன் நெருங்கிய நட்பு கொண்ட இந்தியாவுக்கு ஆதரவாக கிம் எப்படி பேசுவார் என்ற கேள்வியும் எழுந்தது.
dinamani.com | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
2029ம் ஆண்டு வரை பிரதமர் மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும் என்று வட கொரிய அதிபர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
கிம் ஜாங் உன் போல தோற்றம் அளிக்கும் நபர் ஒருவர் ஐ லவ் மோடி என்று குறிப்பிட்ட செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
