ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங்; பாகிஸ்தான் சதி காரணமா?

அரசியல் சர்வதேசம்

‘’ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங் ஆனதற்கு பாகிஸ்தான் சதியே காரணம்,’’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தங்க ராஜ் என்பவர் இந்த பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினத்தந்தி உள்ளிட்ட இணையதளங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். இதே செய்தியை மேலும் பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். இதையொட்டி, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டது. குறிப்பாக, இந்திய பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்படுவது வழக்கமாகும். இதையொட்டி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்வதாகக் கூட பாஜக.,வினர் விமர்சிப்பதும் உண்டு.

இதன்படியே மோடி மாமல்லபுரம் வந்தபோதும் இந்த ஹேஷ்டக் டிரெண்டிங் செய்யப்பட்டது. ஆனால், இதனைச் செய்தது பாகிஸ்தான் உளவு அமைப்பு என்றும், பிரத்யேக ரோபோட்களை வைத்து இதனை பாகிஸ்தான் செய்தது என்றும் கூறி, இந்திய ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டன. ஆங்கிலத்தில் நியூஸ் 18, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்டவை வெளியிட்ட செய்திகளை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

இதுபோலவே, தமிழில் பாகிஸ்தான் சதி எனக் கூறி தினத்தந்தி ஊடகமும் செய்தி பகிர்ந்திருந்தது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ஃபேஸ்புக்கில் பலரும் தகவல் பகிர தொடங்கியுள்ளனர்.

Dailythanthi News LinkArchived Link 

ஆனால், இவர்கள் குறிப்பிடுவது போல இதில் பாகிஸ்தான் பங்களிப்பு பெருமளவில் கிடையாது. ஒரு கணிசமான அளவு மட்டுமே உண்டு. அதாவது, ட்விட்டரில் #GoBackModi பதிவிட்டதில் தமிழர்களே அதிகம். இதில், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பங்களிப்பும் உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானைச் சேர்ந்த சில தனிநபர்கள் குறிப்பிடத்தக்க அளவில் #GoBackModi ட்வீட் செய்திருக்கிறார்கள். அதுவும், இந்தியாவில் இது டிரெண்டிங் ஆகி முடிந்த பிறகே, பாகிஸ்தானில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அதனை முழுதாக பாகிஸ்தான் பங்களிப்பு உள்ளதாகக் கருத முடியாது.
இதன்படி, ட்விட்டர் மற்றும் https://trends24.in/pakistan/ இணையதளத்தில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, அக்டோபர் 11, 2019 அன்று #GobackModi பதிவிட்டதில், இந்தியர்களே உலக அளவில் அதிகமாக உள்ளனர் என தெளிவாகிறது.

இதில் தமிழர்களின் பங்களிப்பு 70 சதவீதம் வரை உள்ளது. தமிழர்கள் இதுதொடர்பாக வெளியிட்ட பதிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அக்டோபர் 11, பிற்பகல் 3 மணிமுதல் மாலை 6 மணிவரை கோபேக் மோடி ஹேஷ்டேக் ட்விட்டரில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பாகிஸ்தானில் அதுபற்றி எந்த பதிவும் பகிரப்படவில்லை. ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆனால், அன்றைய நாளில், இரவு 9 மணிக்குப் பிறகு பாகிஸ்தானியர்கள் கணிசமான அளவில் #GoBackModi டிரெண்டிங் தொடர்பான பதிவுகளை வெளியிட தொடங்கினர். அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பாகிஸ்தானியர்கள் வெளியிட்ட #GobackModi பதிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, அக்டோபர் 10, 11 தேதிகளில் பகிரப்பட்ட கோபேக் மோடி ட்வீட்களில் 70 சதவீதம் இந்தியாவிற்கு உள்ளேயே வசிக்கும் தமிழர்களால் மட்டுமே பகிரப்பட்டதாகும். இதில், மற்ற நாடுகள் குறிப்பாக, பாகிஸ்தானியர்களின் பங்களிப்பு மிகச் சிறிய அளவே ஆகும்.

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளன. குறிப்பாக, AltNews வெளியிட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசு அல்லது பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதி இதில் இல்லை என தெளிவாகிறது. தனிநபர்கள் கோபேக் மோடி ட்வீட்களை வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இது டிரெண்டிங் ஆகி முடிந்த பிறகு, பாகிஸ்தானில் கணிசமான அளவு டிரெண்டிங் ஆகியுள்ளது. இத்தகைய ட்வீட்களில் தமிழர்களின் பங்களிப்பே பெருமளவில் உள்ளது என தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங்; பாகிஸ்தான் சதி காரணமா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •