FACT CHECK: தமிழர்களை கோயில் செல்லாமல் தடுத்துவிட்டு கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்த ஸ்டாலின்!- விஷம பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இந்து கோவிலுக்கு செல்லாத மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ ஆலயத்துக்கு மட்டும் சென்றார் என்ற வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைலராக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ ஆலயத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்புமிகு தமிழக முதல்வர் , சென்னை அண்ணாநகரில் உள்ள தூய லூக்கா ஆலயத்திற்கு வருகை தந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். டேய் இந்து சாமி கும்பிடுரவனுங்களே நல்லா பாத்துகோங்கடா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மே 6 அன்று பதிவிட்டுள்ளது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Selvam Selvaraj என்பவர் 2021 மே 7 அன்று வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு தமிழக முதல்வர், சென்னை அண்ணாநகரில் உள்ள தூய லூக்கா ஆலயத்திற்கு வருகை தந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். மக்கள் கோவிலுக்கு போனால் கொரோனா  பரவிடும். கடவுளே இல்லை என்பவன் சர்ச் க்கு போகலாம் . #திருட்டு #திமுக  ஆமென்” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிறிஸ்தவ ஆலயத்துக்கு ஸ்டாலின் வந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்து சாமி கும்பிடுகிறவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதன் மூலம், மு.க.ஸ்டாலின் இந்து கோவிலுக்கு செல்லாமல், வழிபட கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்தது போன்று பதிவிட்டுள்ளனர். 

அண்ணாநகர் தூய லூக்கா ஆலயத்துக்கு ஸ்டாலின் வந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம் என்பதன் மூலம் எதற்காக மு.க.ஸ்டாலின் அங்கு சென்றார் என்பதையே மாற்றி, ஒரு குறிப்பிட்ட சமயத்தவர்கள் மத்தியில் ஸ்டாலின் பற்றி அவதூறான, தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.

மேலும், இந்து கோவிலுக்குப் போனால் கொரோனா வந்துவிடும், ஆனால் கிறிஸ்தவ ஆலயத்துக்கு மட்டும் போகலாம் என்று கூறியதன் மூலம் இந்துக்கள் கோவிலுக்கு செல்வதை தடுத்துவிட்டு ஸ்டாலின் மட்டும் வழிபாடு நடத்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்தது போல் உள்ளதால் இது பற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா மரணம் அடைந்திருந்தார். அவரது மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மு.க.ஸ்டாலின் 2021 மே 5ம் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள புனித லூக்கா ஆலயத்துக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. 

Archive

கிறிஸ்தவ முறைப்படி இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் பீட்டர் அல்போன்சின் துணைவியார் ஜெசிந்தாவின் உடல் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக தேடிய போது கலைஞர் செய்தி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் தி.மு.க அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் வெளியான படங்கள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: instanews.city I Archive

ஆனால் அந்த உண்மையை மறைந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணாநகரில் உள்ள தூய லூக்கா ஆலயத்துக்கு வருகை தந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். நம்முடைய ஆய்வில் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றார் என்பது உறுதியாகி உள்ளது.

இது மகிழ்ச்சியாக அறிவிக்க வேண்டிய விஷயம் இல்லை. மேலும், மற்ற மதத்தினரை தூண்டிவிடும் வகையில் பதிவு உள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதால் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்து கோவிலுக்கு செல்லாத ஸ்டாலின், கிறிஸ்தவ ஆலயத்துக்கு மட்டும் சென்றார் என அவர் இறுதி அஞ்சலி செலுத்த சென்ற தகவலை மறைத்து விஷமத்தனமாக பதிவிட்டுள்ளதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழர்களை கோயில் செல்லாமல் தடுத்துவிட்டு கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்த ஸ்டாலின்!- விஷம பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context