
‘’கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் உரையாற்றினார். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மத்திய அரசு அணு உலையில் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கிறது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
‘’கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடினார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மக்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். அப்போது, அப்துல்கலாம் மக்கள் முன் உரையாற்றுகிறார். ‘அணு உலை மிகவும் பாதுகாப்பானதுதான். யாரும் எதிர்க்க வேண்டாம்’ என்றார். அவர் கூறிய அடுத்த கனம் போராட்டத்தின் வீரியம் குறைகிறது. அணுஉலை வெற்றிகரமாக நிறுவப்படுகிறது.
அவர் இறந்து நான்கு வருடங்களாகிவிட்ட நிலையில், இன்று மத்திய அரசு கூறுகிறது, அணு உலையில் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கிறது என்று! குறிப்பு: நீ வரலாற்றில் தூக்கிப்படிக்கும் எவனுமே நல்லவன் இல்லை,’’ இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற குழு பகிர்ந்துள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
1980களில், கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பது தொடர்பாக இந்தியாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் (ரஷ்யா) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பிறகு, ரஷ்யா பல நாடுகளாக உடைந்தது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திட்டம் தாமதம் ஆனது. 2001ல் மீண்டும் இந்த திட்டம் உயிர் பெற்றது. தொடக்கத்தில் இருந்தே இந்த திட்டத்திற்கு கூடங்குளம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், ஜப்பானில் புக்குஷிமா அணு உலை கசிவுக்குப் பிறகு இடிந்தகரை பகுதியில் போராட்டம் தீவிரமானது. 2011 செப்டம்பரில் 10 ஆயிரம் பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்த முயன்ற வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அணு உலையை பார்வையிட சென்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், அணு உலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றார். மக்களை சந்திக்காதது ஏன் என்று கேட்டபோது, நான் சமாதானம் செய்ய வரவில்லை. அணு உலை எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று பார்வையிட வந்தேன், என்றார். இது தொடர்பாக பி.பி.சி-யில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதைத் தொடர்ந்து, அணு உலை செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், அன்றிலிருந்து தொடர்ந்து அணு உலையில் பாதிப்பு என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அணு உலையில் இதுவரை எவ்வளவு முறை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு, 2019ம் ஆண்டு வரை முதல் உலை 47 முறை பழுதடைந்துள்ளது என்றும், இரண்டாவது அணு உலையில் 2017ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து 2019ம் ஆண்டு வரை 19 முறை பழுதடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விகடன் இணையதளத்தில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இந்திய அணுசக்தி கழகத் தலைவர் நில்கந்த் வியாஸ், “அணு உலை அடிக்கடி நிறுத்தப்படுவது வழக்கத்துக்கு மாறானது. அதில் பிரச்னை உள்ளது உண்மைதான். அந்த உலையில் தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது. அதை சரிசெய்ய அணுசக்திக் கழக அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்” எனக் கூறினார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அணு உலையில் பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், அது சரி செய்ய முடியாதது என்று கூறுவது தவறானது.
இந்த பதிவில், வரலாற்றில் நீ தூக்கிப்படிக்கும் யாரும் நல்லவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அது நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அப்துல் கலாமை விமர்சிக்கும் வகையில் உள்ளது.
அப்துல்கலாம் அணு உலை பாதுகாப்பானது, ஏன் தேவை என்பதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக விகடனில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது.
அதில், “டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் – கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது – விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!
அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சியில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை. அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!” என பதிலளித்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில்,
அணு உலை பழுதாவது தொடர்கதையாக உள்ளது. ஆனால், அது சரி செய்யவே முடியாத பிரச்னை இல்லை.
தொடக்க நிலை பிரச்னைதான், அதை சரி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர், என்று அணுசக்தி கழகத் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
இந்த அணுஉலை எப்படி பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் விளக்கம் அளித்துள்ளதற்கான ஆதாரம் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முடிவு
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கூடங்குளம் அணு உலையில் சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உள்ளதா?
Fact Check By: Praveen KumarResult: Mixture
