
ஈஷா மையம் சார்பில் காவிரி கரை ஓரம் மரங்களை நடும் காவிரியின் கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அளித்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் காவிரி காலிங் கேம்பெயின்க்கான தனது ஆதரவை திரும்பப் பெற்றார் லியனார்டோ டிகாப்ரியோ என்று உள்ள ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது.
இந்த பதிவை, நீதியின் பக்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி செப்டம்பர் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு பார்க்க உண்மையானது போல உள்ளது. இதனால், ஜெயா பிளஸ்ஸில் இது வந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை, ஜெயா பிளஸ் நியூஸ் கார்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

1) செப்டம்பர் 28ம் தேதி 00.00 AM PM என்று நேரத்தை வித்தியாசமாகக் குறிப்பிட்டு இருந்தனர். ஃபாண்ட் கூட சற்று வித்தியாசமாக தெரிந்தது.
2) அதேபோல், ஒருவரின் கருத்தை கருப்பு நிறத்திலும், பெயரை சிவப்பு நிறத்திலும் வேறுபடுத்தி காட்டுகின்றனர். ஆனால், இந்த நியூஸ் கார்டில் பெயர் கருப்பு நிறத்திலேயே உள்ளது. இதனால், இது போலியானதாக இருக்கலாம் என்று தெரிந்தது.
ஜெயா பிளஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். 28ம் தேதி லியனார்டோ தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

உண்மையில் காவிரியின் கூக்குரலுக்கு அளித்த ஆதரவை, லியனார்டோ திரும்பப் பெற்றாரா என்று தேடினோம். முதலில், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில், ஈஷா மேற்கொண்டுள்ள காவிரி ஆறு மீட்பு திட்டத்தைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தது மட்டுமே கிடைத்தது. ஆதரவை திரும்ப பெற்றதாகவோ, காவிரியின் கூக்குரல் திட்டம் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
Archived Link |
ஒருவேளை, வேறு எங்காவது இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, ஈஷாவின் காவிரியின் கூக்குரல் பிரசாரத்துக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று லியனார்டோ டிகாப்ரியோவுக்கு பல தன்னார்வல அமைப்புக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட செய்திகள் கிடைத்தன. அதேபோல், தன்னார்வ அமைப்புகளுக்கு ஈஷா சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பு தொடர்பான செய்தியும் கிடைத்தது.
theguardian.com | Archived Link 1 |
hindutamil.in | Archived Link 2 |
swarajyamag.com | Archived Link 3 |
நம்முடைய ஆய்வில்,
1) ஜெயா பிளஸ் பெயரில் வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2) காவிரியின் கூக்குரல் பிரசாரத்துக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக லியனார்டோ கூறவில்லை.
3) லியனார்டோ தன்னுடைய ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் கோரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காவிரியின் கூக்குரல் பிரசாரத்துக்கு அளித்த ஆதரவை பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ திரும்பப் பெற்றார் என்ற பகிரப்பட்டு வரும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ?- ஃபேஸ்புக் வைரல் செய்தி
Fact Check By: Chendur PandianResult: False
