சுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு!

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவையை அகற்றக் கோரி கொடியை எரித்து சுவிட்சர்லாந்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SWITZERLAND 2.png
Facebook LinkArchived Link

சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியின் லிங் புகைப்படத்தை வைத்துள்ளனர். பார்க்கும்போது அந்த செய்தி முழுமையாக உள்ளதுபோல் தெரியவில்லை. 

அந்த படத்துக்குக் கீழே, “சுவிட்சர்லாந்து முஸ்லிம்கள் அந்த நாட்டுக் கொடியில் சிலுவை இருப்பதனால் அவர்களுக்குக் கஷ்டமா இருக்குதாம். அதனால் தேசிய கொடியை எரித்து போராட்டம் பண்றாங்க” என்று டைப் செய்துள்ளனர்.

இந்த பதிவை முத்து கிருஷ்ணன் என்பவர் செப்டம்பர் 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் உள்ளவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்தவர்கள் போலத் தெரியவில்லை. மேலும், சுவிட்சர்லாந்து கொடி போலவும் இது இல்லை. சுவிட்சர்லாந்து கொடியில் கூட்டல் குறி போல நான்கு பக்கமும் சம அளவில் உள்ள சிலுவையே இருக்கும். ஆனால், இந்த கொடியில் ஒரு பக்கம் நீளமாக உள்ளது. எனவே, இது உண்மைதானா என்று கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில், செய்தி இணைப்பு என்று கொடுத்துள்ளதை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, ஃபிரண்ட்லைன்நியூஸ் என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அந்த செய்தியில்,மேற்கண்ட புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை.

frontlinesnews.comArchived Link

செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், “சுவிட்சர்லாந்து பல கலாச்சார மக்கள் ஒன்று சேர்ந்து வாழும் நாடாக மாறிவிட்டது. பல மதத்தினர் வசிக்கின்றனர். கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறியவர்களும் நிறைய பேர் உள்ளனர். எனவே, எதற்காக பழைய பெருமையை தூக்கி சுமக்க வேண்டும். அனைத்து மக்களும் பெருமைப்படும் வகையில் புதிய கொடியை உருவாக்க வேண்டும் என்று இரண்டாம் தலைமுறையாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்” என்று இருந்தது. எந்த அமைப்பு இப்படி ஒரு கோரிக்கை விடுத்தது, எப்போது கோரிக்கைவிடப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால், வேறு ஒரு இணைய தளத்தில் இருந்து அந்த செய்தி எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது.

2011ம் ஆண்டு gatestoneinstitute என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியை எடுத்து, ஃபிரண்ட்லைன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளது தெரிந்தது. இந்த இணையதளத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த இணைய தளம் இஸ்லாமியர் வெறுப்பு வெறுப்பு செய்திகளை வெளியிடும் ஊடகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இஸ்லாமிர் பற்றி தவறான, வெறுப்பை ஏற்படுத்தும் செய்திகளை இது வெளியிட்டு வருவதாக என்.பி.சி.நியூஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது.

gatestoneinstitute.orgArchived Link 1
nbcnews.comArchived Link 2

கொடியை எரிக்கும் படம் தொடர்பாக ஆய்வு நடத்தினோம். முதலில் அது சுவிட்சர்லாந்து நாட்டுக் கொடி இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். கூகுளில் சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் தேசியக் கொடி என்று டைப் செய்து தேடியபோது, இரண்டு கொடிகளும் நமக்கு கிடைத்தன. அதை ஒப்பிட்டுப் பார்த்தபோது எரிக்கப்பட்டது டென்மார்க் கொடிதான் என்பது உறுதியானது.

தொடர்ந்து அந்த கொடி ஏன் எரிக்கப்பட்டது, எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று கண்டறிய,  படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த படம் பற்றிய உண்மை தகவல் நமக்குக் கிடைத்தது.

Search Link

2005ம் ஆண்டு டென்மார்க்கை சேர்ந்த பத்திரிகை ஒன்று இஸ்லாமியர்கள் மிகவும் உயர்வாக மதிக்கும் முகமது நபியைப் பற்றி அவதூறாக கார்ட்டூன் வெளியிட்டது. அதைக் கண்டித்து  இஸ்லாமிய நாடுகளில் சிலர் டென்மார்க் தேசியக் கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டு இருந்தனர். 

SWITZERLAND 4.png
thewrap.comArchived Link 1
gettyimagesArchived Link 2

தொடர்ந்து தேடியபோது Getty Images இணையதளத்தில் இந்த புகைப்படம் விற்பனைக்கு இருப்பது தெரியவந்தது. அதில், 2006ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் டென்மார்க் கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பை மக்கள் தெரிவித்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

நம்முடைய ஆய்வில், 

எரிக்கப்பட்ட கொடி சுவிட்சர்லாந்துடையது இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து தேசிய கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை நீக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியிட்ட ஊடகத்தின் நம்பகத்தன்மை போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு கராச்சியில் டென்மார்க் கொடி எரிக்கப்பட்டதை, சுவிட்சர்லாந்து கொடி எரிப்பு என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுவிட்சர்லாந்தின் கொடியை மாற்றக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று வெளியான தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False