சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதாகவும் இதனால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோபமடைந்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

சாமியார் ஒருவர் பேசுகிறார். அருகிலிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீரென்று ஆவேசமாக எழுந்து அவருடன் உரையாடுகிறார். அவரை அமரும்படி அந்த சாமியார் கூறுகிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு எடியூரப்பா அமர்கிறார். 

47 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை மேலப்பாளையம் காஜா மைதின் என்பவர் 2020 ஜனவரி 15ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று மடாதிபதி பேசியதற்கு, எடியூரப்பா ஆவேசம் அடைந்து வெளியேற முயன்றார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. எல்லா முன்னணி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலோ குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். 

hindutamil.inArchived Link 1
tamil.samayam.comArchived Link 2
maalaimalar.comArchived Link 3

விகடன் வெளியிட்டிருந்த செய்தியில், “முதல்வர் எடியூரப்பாவை நோக்கி மேடையில் பேசிய பஞ்சம்சாலி சமூகத்தின் மடாதிபதி வச்சானந்தா, “எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். அதிலும் எம்.எல்.ஏ முருகேஷ் நிரானி, ஒரு தூண் போல இருக்கிறார். அவருக்கு கர்நாடக அமைச்சரவையில் பதவி வழங்காவிட்டால், மொத்த பஞ்சம்சாலி சமுதாயமும் உங்களைப் புறக்கணித்துவிடும்” என்று கூறினார்.

இதைக் கேட்டு கொதித்த எடியூரப்பா, உடனடியாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, ‘இதுபோன்று பேச வேண்டாம், இதைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. உங்கள் பேச்சை ஏற்க முடியாது’ எனக் கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போதும் மிரட்டும் தொனியில் அவரை இருக்கையில் அமரும்படி கூறி, ‘ நான் நியாயத்தை மட்டுமே பேசுகிறேன்’ என்றார் மடாதிபதி வச்சானந்தா. கோபத்தின் உச்சத்திலிருந்த எடியூரப்பாவை அருகிலிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அமரவைத்தனர்.  மடாதிபதி வச்சானந்தா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ, இணையத்தில் வெளியாகி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த வீடியோவை அவர்கள் வெளியிடவில்லை.

vikatan.comArchived Link

இது தொடர்பான வீடியோ கிடைக்கிறதா என்று தேடிய போது, இந்தியா டுடே வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில், எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி கேட்டு லிங்காயத்து மடாதிபதி மிரட்டல் என்று செய்தி வெளியாகி இருந்தது. அதில் மொழி பெயர்ப்பையும் அளித்திருந்தனர்.

மடாதிபதி பேசும்போது, “முருகேஷ் நிரானி உங்களுடன் பாறை போல நிற்பார். அவருக்கு உங்கள் அமைச்சரவையில் இடம் கொடுங்கள். இல்லை என்றால் லிங்காயத்தின் ஐந்து மடாதிபதிகளும் உங்களுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்” என்கிறார். அப்போது கூடியிருந்த மக்கள் ஆராவாரம் செய்கின்றனர். முதல்வர் எடியூரப்பா மடாதிபதியின் கையைத் தட்டி எதிர்ப்பு தெரிவித்து எழுந்திருக்கிறார். 

Archived Link

உடனே மடாதிபதி “உட்காருங்கள்… நான் உண்மையை பேசுகிறேன். உட்காருங்கள்” என்கிறார்.

இதற்கு எடியூரப்பா, “நீங்கள் தொடர்ந்து இப்படி பேசியதால் நான் வெளியேறுகிறேன்” என்று அவரது கால் மூட்டு அருகே தொட்டு வணங்குகிறார். தொடர்ந்து பேசும் எடியூரப்பா, “நீங்கள் எனக்கு ஆலோசனை கூறலாம். ஆனால் மிரட்டக்கூடாது” என்கிறார்.

அதற்கு மடாதிபதி, “உங்களை நெருக்கவில்லை, நீதியை கேட்கிறோம். இது எங்கள் உரிமை” என்கிறார். மடாதிபதியின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குரல் எழுகிறது. இதனால், எடியூரப்பா அமைதியாக அமர்கிறார். பின்பு மேடையில் பேசும்போது தன்னுடைய கருத்தை எடியூரப்பா சொன்னார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஒருவேளை மடாதிபதியின் பேச்சை மாற்றி ஒலிப்பதிவு செய்துள்ளார்களா என்பதை அறிய, இரண்டு வீடியோவில் உள்ள ஆடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. இதை மேலும் உறுதி செய்துகொள்ள, கர்நாடகாவில் உள்ள கன்னடம் தெரிந்த நண்பருக்கு இந்த வீடியோவை அனுப்பி, மடாதிபதி தன்னுடைய பேச்சில் குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினாரா என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “அப்படி எதுவும் இல்லை. எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி கேட்டு பேசுகிறார்” என்று உறுதி செய்தார்.

பலருக்கும் கன்னடம் தெரியாது என்பதால் தவறான தகவல் பரவி வருவது தெரிந்தது. மலையாளத்திலும் அவரது பேச்சை மாற்றி பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவும் கூட கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் கூட, லிங்காயத்து மடாதிபதி பா.ஜ.க எம்.எல்.ஏ முருகேஷ் நிலானிக்கு அமைச்சர் பதவி கேட்டார் என்று உறுதி செய்து கட்டுரை வெளியிட்டிருந்தனர். 

Archived Linkmalayalam.factcrescendo.com

நம்முடைய ஆய்வில்,

எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி கேட்டு லிங்காயத்து மடாதிபதி பேசியது எல்லா ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மொழி பெயர்ப்பும் கூட மடாதிபதி தங்கள் சமுதாய எம்.எல்.ஏ ஒருவருக்கு பதவி கேட்டதை உறுதி செய்துள்ளது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு கூட இது தொடர்பான கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதால் கோபப்பட்டு வெளியேறிய எடியூரப்பா என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?

Comments are closed.