
‘’செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் மதுபான ஆலைகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டி,’’ ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவு பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நெல்லைத் தமிழன் இம்மான் என்பவர் கடந்த ஜூன் 16ம் தேதியன்று மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த பதிவில், ரயிலில் செல்லும் தண்ணீர் டேங்குகள் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சென்னையில் தண்ணீர் பஞ்சமாம், ஆனால், செங்கல்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு எங்கு போகிறதென்று தெரியவில்லை,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் தண்ணீர் பஞ்சம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்தவர் தினசரி செய்தித்தாள் படிப்பதோ, டிவி பார்ப்பதோ இல்லை போலும். ஆம், இந்த செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட நீர், தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகும்.
இதுபற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் விரிவான செய்தி ஒன்றை கடந்த 2019, ஜூன் 10ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதாவது செங்கல்பட்டு ஏரியில் இருந்து போர்வெல் மூலமாக, தண்ணீர் உறிஞ்சப்பட்டு, சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் ரயில் பெட்டிகளை கழுவவும், இதர பராமரிப்புப் பணிகளுக்கும், எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தண்ணீர் தேவைப்படும்போது, இந்த முறையை மேற்கொள்வதாகவும், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெற்கு ரெயில்வே பராமரிப்புப் பணிகளுக்கு நீர் எடுத்துச் செல்லப்படுவதை, தவறான முறையில் சித்தரித்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிது. இதுதவிர, வேறு யாரேனும் இதேபோல கருத்து தெரிவித்துள்ளனரா என தேடிப் பார்த்தோம்.
அப்போது, ரயில் மூலம் மதுபான ஆலைகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாக குற்றம்சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டிருந்ததை காண நேரிட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டும் தவறாகும். ஏற்கனவே இது தெற்கு ரயில்வே பராமரிப்புப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெளிவுபடுத்திவிட்டோம். மேலும், இதுதொடர்பான செய்தி ஆதாரங்களை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
இதுதவிர, மேலும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. அதிலும் இதேபோல, மதுபான ஆலைகளுக்கு நீர் எடுத்துச் செல்லப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இப்படி மேன்மேலும் ரயிலில் நீர் எடுத்துச் செல்லப்படுவதை தவறாகச் சித்தரித்து பதிவுகளை பகிர்வதால், ஒருவேளை இதுபற்றி ரயில்வே நிர்வாகம் விளக்கம் ஏதேனும் அளித்துள்ளதா, என தேடிப் பார்த்தோம். அப்போது, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம் கிடைத்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகள் அனைத்தும் தவறானவை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் எங்கே போகிறது?
Fact Check By: Parthiban SResult: False
