
‘’காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

பாசறை சுதன் என்பவர் ஜூன் 20, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘’ 40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்திவரதர் கிணற்றிலிருந்து வெளியே வருகிறார் மீண்டும் 2059 ஆம் ஆண்டு மட்டும் பார்க்க முடியும் அறிய தரிசனம் இன்று,’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவு உண்மைதானா என்ற சந்தேகம் எழவே, அதன் பெயரில், அதன் கீழே பகிரப்பட்டுள்ள கமெண்ட்களை படித்து பார்த்தோம். அந்த கமெண்ட் பகுதியிலேயே பலர் இதனை தவறான தகவல் என்றும், இது அத்தி வரதர் தரிசன நிகழ்வு இல்லை என்றும், இது தேவராஜர் தரிசனம் (நடவாவி உற்சவம்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்தி வரதர் நிகழ்வு வரும் ஜூலை மாதத்தில்தான் நடக்கும் எனவும் வாசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதன்பிறகும், பதிவை நீக்காமல், சம்பந்தப்பட்ட நபர் அப்படியே வைத்திருக்கிறார்.

எனவே, சம்பந்தப்பட்ட பொதுமக்களே, இதை தவறான தகவல் என்று உறுதி செய்துவிட்டதால், நமக்கும் இங்கே வேலைச் சுமை குறைகிறது. இருந்தாலும், நடவாவி உற்சவம் என்றால் என்ன என்று தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த வீடியோவின் உண்மை வீடியோ ஆதாரம் கிடைத்தது. இதன்படி, இது நடவாவி உற்சவம்தான் என உறுதி செய்யப்படுகிறது.
இதன்மூலமாக, நடவாவி உற்சவ வீடியோவை எடுத்து, அத்தி வரதர் தரிசனம் என தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்த வீடியோவில் உள்ள தகவல் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அத்தி வரதர் தரிசனம்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
