
‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி உச்சி முகர்வது போல நிற்கிறார். இது உண்மைதானா என்ற பெயரில், கூகுளில் சென்று, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடியை அத்வானி பாராட்டினார் என்றும், அந்த புகைப்படம்தான் இது என்றும் உறுதியானது.

இந்தியா டுடே வெளியிட்ட இதுதொடர்பான செய்தியில், மோடிக்கும், அத்வானிக்கும் உள்ள கருத்து வேறுபாடு மறைந்து, இருவரும் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், அளவளாவிக் கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆதார புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது பழைய புகைப்படம் என்றும், இதனை தற்போதைய 2019 மக்களவை தேர்தல் வெற்றியுடன் தொடர்புபடுத்தி தவறாக பகிர்ந்துள்ளனர் என்றும் உறுதியாகிறது.
ஒருவேளை, 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக, அத்வானி, மோடிக்கு எதுவும் வாழ்த்து தெரிவித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் மீண்டும் தேடிப் பார்த்தோம். அப்போது, அத்வானி வீட்டுக்கே சென்று மோடி, அவரது காலில் விழுந்து வணங்குவது போன்ற புகைப்படம் கிடைத்தது.

இதுதொடர்பாக, நியூஸ் 18 வெளியிட்டுள்ள புகைப்பட கேலரியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். இதுபற்றி தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட வீடியோ செய்தி பார்க்க இங்கே கிளிக் செய்யவும். பழைய புகைப்படத்தையும், புதிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு, கீழே விளக்கப் படம் தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட புகைப்படம் பழையது மற்றும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?
Fact Check By: Parthiban SResult: False
