“நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை… அவர் தேசியவாதி!” – அன்புமணி ராமதாஸ் பேச்சு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

நாதுராம் கோட்சே மிகப்பெரிய தேசியவாதி, அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்க மாட்டேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

கமலஹாசன் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்….!!!

நாதுராம் கோட்சே நாட்டுப்பற்றுடைய மிகப்பெரிய தேசியவாதி அவரை தீவிரவாதி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்…!!!

Archived link

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உடன் அன்புமணி நிற்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதனுடன், கமலஹாசன் பேச்சுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், நாதுராம் கோட்சே நாட்டுப்பற்றுடைய மிகப்பெரிய தேசியவாதி என்றும் அவரை தீவிரவாதி என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அன்புமணி கூறியதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. வெளிச்சம் சமூகவலைதளம் N-1 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 18ம் தேதி இது வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. கூட்டணி அமைவதற்கு முன்பு வரை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்துவந்தது. திடீரென்று அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தது மிகப்பெரிய விமர்சனத்தை கிளப்பியது. ஒருவழியாக தேர்தல் முடிந்தது.

பின்னர், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று கமல் பேசியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று எல்லாம் மிக கடுமையாக பேசினர்.

இந்து அமைப்புக்கள் கமல் பிரசாரத்தில், முட்டை, செருப்பை வீசி தாக்குதல் நடத்தின. பா.ஜ.க-வினர் கமலுக்கு எதிராக பேசினர். இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த பா.ம.கவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்தது போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தகவல் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால் அப்படி ஏதும் செய்தி இல்லை.

பா.ம.க அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டரில் ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மே 4ம் தேதி கடைசியாக பதிவிடப்பட்டு இருந்த. கட்சியின் இணைய தளத்திலும் இதுதொடர்பாக, எந்த ஒரு அறிக்கையும் இல்லை. இதுதொடர்பாக, பாமக வட்டாரத்தில் தகவல் விசாரித்தோம். அன்புமணி அப்படி எதுவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்று அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

இந்த பதிவை வெளியிட்ட வெளிச்சம் சமூகவலைதளம் N-1  பக்கத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ வெளிச்சம் டி.வி-யின் ஃபேஸ்புக் பக்கம் போல தெரிந்தது. முழுக்க முழுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அவர் தொடர்புடைய செய்திகளாகவே இருந்தன.

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், அன்புமணி ராமதாஸ் தொடர்பான பதிவு விஷமத்தனமானது, தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை… அவர் தேசியவாதி!” – அன்புமணி ராமதாஸ் பேச்சு உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •