
லக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
இளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் இந்தியில் ஏதோ சொல்கின்றனர். 45 விநாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது. வீடியோ இரு நபர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் போல உள்ளது.
தாக்குதலுக்கு ஆளான நபர், “இங்கே நீதி கிடைக்காதா சார்?” என்கிறான். அதற்கு ஒருவர், “இங்கே உனக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்” என்கிறார். அதற்கு தாக்குதலுக்கு ஆளான நபர், “முதலில் புகாரை பதிவு செய்யுங்கள்” என்கிறார். அதற்கு எதிர்தரப்பில், “முதலில் நீ எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்” என்கிறார். உடன் தாக்குதலுக்கு ஆளான நபர், “நீங்களே புகாரை எழுதுங்கள்… இஸ்லாம், யூனுஸ் பெயரில்” என்கிறார்.
நிலைத் தகவலில், உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், இந்து என்ற காரணத்தால் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே தங்கை சாந்திபிரியாவை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து, இஸ்லாமியர் இடையேயான மோதல் என்று குறிப்பிட்டுள்ளதால் இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை 26 ஜூன் 2019 அன்று NNews9Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இதைப் போல, நாம் இந்துக்கள் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
இளம் பெண் ஒருவர் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும், அதை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றதும் அது உண்மையா என்று துளிகூட ஆய்வு செய்யாமல் பலரும் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாம் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இது தொடர்பாக ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த செய்தி உண்மை இல்லை என்பது புரிந்தது. அதேநேரத்தில், இந்த வீடியோ மற்றும் தகவல் உண்மைதானா என்று நம்முடைய www.factcrescendo.com (ஃபேக்ட் கிரஸண்டோ) இந்தி பிரிவு உள்ளிட்ட பல உண்மை கண்டறியும் தளங்கள் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்தது தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த ஆய்வை நாம் படித்தபோது, இந்த வீடியோவில் இருப்பவர்கள் இந்துக்கள் இல்லை என்பது தெரிந்தது.
இந்த சம்பவம் லக்னோவில் உள்ள Itaunja என்ற பகுதியில் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களும் தாக்குதலுக்கு ஆளானவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். அதிலும் தாக்குதலுக்கு ஆளான இருவரும் இந்துக்கள் இல்லை… இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சகோதரனின் பெயர் முகமது ஷாருக்கான், தங்கையின் பெயர் ஷப்னம்.
தாக்குதல் நடந்த அன்று, இரவு ஷாரூக் மற்றும் ஷப்னம் போலீசில் புகார் செய்யச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த காவலர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். அப்போதுதான் ஷாரூகான், தங்கள் குடும்பத்தினரை சிலர் தாக்கிவிட்டனர் என்று கூறும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை லக்னோ எஸ்.எஸ்.பி பார்வைக்கு சென்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லக்னோ போலீசார் வெளியிட்ட ட்வீட்டும் நமக்குக் கிடைத்தது. அதில், “லக்னோவின் Itaunja காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் வீடுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அது இரண்டு குழு சண்டையாக மாறிவிட்டது. வீடியோவில் உள்ள ஷாரூக் மற்றும் ஷப்னம் நள்ளிரவு 1.25 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தனர். குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக குழு அமைக்கப்பட்டது. வழக்கு CO BKT பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்து பெண்ணை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
லக்னோ போலீஸ் எஸ்.எஸ்.பி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டும் கிடைத்தது. அதில், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவலரின் மனிதத்தன்மையற்ற செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று அறிவுறுத்தியதுடன், ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரியும் தங்களுக்குக் கீழ் பணி புரியும் காவலர்கள் சரியாகச் செயல்படும்படி வழிகாட்ட வேண்டும் என்று லக்னோ எஸ்.எஸ்.பி Kalanidhi Naithani IPS கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுத் தொடர்பாகவும் லக்னோ போலீசார் ட்வீட் செய்திருந்தனர். உஸ்மான், ஷகீல், யூனுஷ், இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், லக்னோவில், வீட்டின் அருகே நடந்த தெரு சண்டையை, அதுவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடந்த சண்டையை, இந்து – இஸ்லாம் பிரச்னையாக பொய்யான தகவலை அளித்து, பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், அவருக்கு நீதி வேண்டும் என்று விஷமத்தனத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்? – உண்மை அறிவோம்!
Fact Check By: Praveen KumarResult: False
