
கழிவறையில் உணவு சமைப்பது பிரச்னைக்குரியது இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருந்தார். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்று ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அமைச்சரின் படத்தின் மேல், “கழிவறையில் உணவு சமைப்பது பிரச்சினைக்குரியது அல்ல என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்பட காட்சிக்குக் கீழ் “பாஜக கட்சியில் ஒன்னு ரெண்டு பைத்தியம் இருந்தா பரவாயில்ல, மொத்தமும் அப்படித்தான் இருக்கும் போல?” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, மாற்றியோசி Mattriyoci என்ற ஃபேஸ்புக் குழு 2019 ஜூலை 24ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி ஒன்றில் கழிப்பறை அருகே தற்காலிகமாக மதிய உணவு சமைக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. படத்துடன் கூடிய செய்தியை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கடந்த 23ம் தேதி வெளியிட்டிருந்தது.
அதில், கழிப்பறை என்று எழுதப்பட்டுள்ள ஒரு அறையைக் காட்டியுள்ளனர். உள்ளே ஒரு சுற்றை ஒட்டி மண் அடுப்பு உள்ளது. மற்றொரு படத்தில், மலம் கழிக்கும் அறையை காட்டியுள்ளனர். அது பார்க்க பயன்படுத்தப்படாத கழிப்பறை போல உள்ளது. அங்கே சமையல் அறை பொருட்கள் சில இருந்தன. மலம் கழிக்கும் அறை தனியாக உள்ளது. அதன் வெளிப்புற பக்கவாட்டு சுவர் பகுதியில் சமையல் அறை இருப்பது தெரிகிறது.
இந்த அங்கன்வாடி மற்றும் கழிப்பறையை மகளிர் சுய உதவி குழு பராமரித்து வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவியிடம் இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கேட்டுள்ளது. அதற்கு அமைச்சர், “நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கழிப்பறைக்கும் சமையல் அறைக்கும் இடையே தடுப்பு உள்ளது. இந்தக் காலத்தில் நம்முடைய வீடுகளின் உள்ளேயே கூட கழிப்பறைகள் சேர்த்துக் கட்டப்படுவது இல்லையா?
சமையல் செய்ய உதவும் பொருட்களை கழிப்பறை உள்ளே வைக்கப்படுவது வழக்கம்தான். நம்முடைய வீடுகளில் கூட இது நடக்கிறது. அங்கே உள்ள பானைகளில் கல் போன்ற பொருட்கள்தான் வைக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

கழிப்பறைக்குள் உணவு தயாரிப்பது சரி என்று அந்த பேட்டியில் அவர் கூறவில்லை. சமையல் அறைக்கும் கழிப்பறைக்கும் இடையே தடுப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், தலைப்பில் கழிப்பறைக்குள் உணவு தயாரித்தால் தவறு இல்லை என்று அமைச்சர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். ஏ.என்.ஐ செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
யுஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது போலவே எல்லா ஊடகங்களும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், செய்தியின் உள்ளே, அமைச்சர் கூறியதை அப்படியே வெளியிட்டு இருந்தனர். இதனால் இந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பானது. அமைச்சரின் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழிலும் கூட இந்த செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சார்ந்தவர் என்று குறிப்பிட்டிருப்பது தவறானதாகும்.

இதை உறுதி செய்ய இமார்த்தி தேவியைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். கூகுளில் இமார்த்தி தேவி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டு அவருடைய சுய விவர குறிப்பை வெளியிட்டிருந்தது.
2018ம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தோம். அதில், குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேபரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இமார்த்தி தேவி வெற்றிபெற்றார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தேபரா தொகுதி முடிவுகளை ஆய்வு செய்தோம் அப்போது, கிட்டத்தட்ட 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தியது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மத்திய பிரதேச பெண் அமைச்சர் இமார்த்தி தேவி பா.ஜ.க-வை சேர்ந்தவரா?
Fact Check By: Chendur PandianResult: False
