
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

வாட்ஸ் ஆப்-ல் வாசகர் ஒருவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். பா.ஜ.க பக்கம் ஒன்றில் பலரும் அந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்திருப்பது தெரிந்தது. அதில், “டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி செல்ல வழி வகுக்கும். இதை மத்திய அரசு கை விட வேண்டும்” என்று இருந்தது.

ஃபேஸ்புக்கிலும் இந்த ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டை சிலர் பகிர்ந்து வருகின்றனர். Bigtemple Madhavan என்பவர் 2020 ஜூன் 30ம் தேதி இதை வெளியிட்டுள்ளார். அதில், “Tik tok ல இந்தியப் பொருளாதாரம் இருக்குனு கண்டுபிடித்த மதுரை MP.” என்று கூறியுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதுரை எம்.பி வெங்கடேசன் பற்றி தீவிர வலதுசாரிகள் அவ்வப்போது வதந்தி பரப்பி வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதாக, மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கோபுர சின்னத்தை அகற்ற வேண்டும் என்று கூறியதாக, மீனாட்சி அம்மன் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதாக தொடர்ந்த குறிவைத்து அவர் கூறாத பல தகவலை சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் கம்யூனிச ஆட்சி நடக்கும் சீனாவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது போல, சீனாவுக்கு ஆதரவாக சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளதுள்ளதாக ட்வீட் பதிவு உள்ளது. அசல் போல தெரிவதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
சு.வெங்கடேசனின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு பதிவும் இல்லை. செயலிகளுக்கு தடை தொடர்பாக அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை கருத்தை பதிவிட்டுவிட்டு, எதிர்ப்பு காரணமாக அகற்றினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக சு.வெங்கடேசனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “இது நான் வெளியிட்ட பதிவு இல்லை. என்னுடைய ட்வீட் ஐடியை பயன்படுத்தி போலியாக ட்வீட் பதிவு தயாரித்து, அதன் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர். இப்படி பகிர்வதை தடை செய்ய வேண்டும்” என்றார்.
சீன செயலிகளை தடை செய்தது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எந்த கருத்தும் வெளியிடவில்லை. தன் பெயரில் பரவும் ட்வீட் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வெங்கடேசன் நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் “டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி செல்ல வழி வகுக்கும். இதை மத்திய அரசு கை விட வேண்டும்” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாக பகிரப்படும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
