இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

இந்திய ராணுவ வீரர்கள் படம் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட மாடல் படங்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மரத்துக்கு அருகே மரம் போலவே தோற்றம் அளிக்கும் வகையில் உடை அணிந்த ராணுவ வீரர்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உங்கள் கண்ணுக்கு #இந்திய_ராணுவவீரர் தெரிந்தால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரா லாரன்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2020 ஜூன் 30ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் இந்திய ராணுவத்தை புகழ்ந்து பதிவிடுகிறேன் என்று கூறி பலரும் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத படமாக இருந்துவிடுகிறது. அதுகூட பரவாயில்லை, பயங்கரவாதியின் படத்தை எல்லாம் பகிர்ந்து இந்திய ராணுவ வீரர் என்று பகிர்ந்தது எல்லாம் நடந்தது.

இந்திய ராணுவத்தின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் எதிரிகள் கண்களுக்கு தெரியாத வகையில் மிக ரகசியமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்திய ராணுவத்தினர் என்று குறிப்பிட்டுள்ளதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

Facebook LinkArchived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அமெரிக்காவின் ராணுவத்துக்கான ஆடை தயாரிப்ப நிறுவனம் ஒன்று வடிவமைத்த ஆடை என்று பல பதிவுகள் நமக்குக் கிடைத்தன. Gulch LLC என்ற நிறுவனம் வெளியிட்ட படம் என்று பல பதிவுகள் கூறியதால், அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்துக்குச் சென்று தேடினோம். அப்போது அந்த நிறுவனம் வெளியிட்ட அசல் படம் கிடைத்தது. மேலும், அதன் ஃபேஸ்புக் தளத்திலும் இந்த படங்கள் வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 

gulchgear.comArchived Link

அந்த நிறுவனத்தைப் பற்றிய தகவலைத் தேடியபோது அது ராணுவம் உள்ளிட்டவற்றுக்காக ஆயத்த ஆடை தயாரித்துக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் வித்தியாசமான பல வடிவமைப்புகளை அவர் வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.

இதன் அடிப்படையில் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட படத்தை இந்திய ராணுவ வீரர்கள் என்று தவறாகக் குறிப்பிட்டுப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்திய ராணுவ வீரர்களைப் பற்றி ஆயிரம் விஷயங்கள் உள்ளன. அதை வெளியிட்டால் உண்மையான தகவல் மக்களை சென்று சேறும். தவறான தகவலை பரப்புவதற்கு பதில் நிஜத்தை பரப்பினால் ஏதாவது பயனாவது இருக்கும்!

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False