ராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

மு.க.ஸ்டாலின் பேரன், பேத்திகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தியில் பேசி அசத்தியதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ராகுல் காந்தியிடம் இந்தி பேசி அசத்திய ஸ்டாலின் பேரன் பேத்திகள்…..

உங்க வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கலாம் எங்க பிள்ளைகள் இந்தி படிக்க கூடாதா ?

Archived link

தி.மு.க தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு ஸோஃபாவில் அமர்ந்திருக்கின்றனர். ராகுல் காந்தி அருகில், மு.க.ஸ்டாலினின் பேரன், பேத்திகள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால், நிலைத் தகவலில் ராகுல் காந்தியிடம் இந்தி பேசி அசத்திய ஸ்டாலின் பேரன், பேத்திகள் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், உங்க வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கலாம், எங்க பிள்ளைகள் இந்தி படிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த பதிவை, Kalavathi Kala என்பவர் 2019 ஜூன் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று முதலில் தேடினோம். படத்தை, yandex.com-ல் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மு.கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக தொடர்ந்து தேடியபோது, மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு ராகுல் காந்தி வந்தது தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

புதிய தலைமுறை, விகடன், ஒன் இந்தியா என்று பல இணைய தளத்திலும் இந்த செய்தி கவர் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எதிலும் ராகுல் காந்தியுடன் இந்தியில் பேசிய ஸ்டாலின் பேரன், பேத்திகள் என்று குறிப்பிடவில்லை.

முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தி! என்று தலைப்பிடப்பட்ட விகடன் செய்தியில், “ஸ்டாலினின் பேரன் இன்பா மற்றும் பேத்திகளுடன் செல்லமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதை ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்டாலின்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஒன் இந்தியா செய்தியில், “அதன் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அவரை ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ராகுல் காந்திக்கு ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். அப்போது ஸ்டாலினின் பேரன், பேத்திகள், மகள், மருமகனுடன் சிறிது நேரம் உரையாடினார் ராகுல் காந்தி. ஸ்டாலின் மனைவி துர்காவிடமும் நலம் விசாரித்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதிய தலைமுறை செய்தியில், மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு ராகுல் காந்தி வந்தார் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். ராகுலிடம் ஸ்டாலின் பேரன், பேத்திகள் இந்தியில் பேசினார்கள் என்று எங்கும் இல்லை.

இதை உறுதி செய்ய, தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், “தலைவர் இல்லத்துக்கு ராகுல்காந்தி வந்தபோது நானும் உடன் இருந்தேன். மேற்கண்ட பதிவில் உள்ளது போல இந்தியில் எல்லாம் அவர்கள் பேசவில்லை” என்றார்.

படம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. அது கட்டாயமாக்கப்படுவதையே எதிர்க்கின்றனர். சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வரைவை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், மும்மொழி கொள்கை என்ற பெயரில், இந்தி கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமாக்கப்படும், ப்ரீ ஸ்கூல் முதல் 12ம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமான நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை இந்த குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியாகவுள்ளது” என்றுதான் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவில் திருத்தம் செய்தது. இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மை இப்படி இருக்க, ஸ்டாலின், ராகுல் காந்தி அருகில் இருந்து கவனித்தது போல, ஸ்டாலின் பேரன், பேத்திகள் இந்தியில் பேசினார்கள் என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இதன் மூலம், போகிறபோக்கில் பொய்யான தகவலை சொல்லிவிட்டு சென்றுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False