
தமிழ்நாட்டை ஆள நினைக்கும் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல், ரஜினிகாந்த் கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஆகியோரின் படங்கள் சேர்த்து ஒரே படமாக தயாரித்துள்ளனர். அதன் மேலும் கீழும், “தமிழ்நாட்டையும் தமிழர்களையும் ஆள வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், உலகமே எதிர்க்கும் அணுக்கழிவை தமிழ்நாட்டில் வைக்கக் கூடாது, நாங்கள் விட மாட்டோம் என்று இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பதிவை, சமூக விரோதி என்ற ஃபேஸ்புக் குழு 2019 ஜூன் 22ம் தேதி வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஆயிரக் கணக்கானோர் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் 10ம் தேதி பொது மக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க தவிர்த்து தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக் கூடாது, கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும், பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக 2019 ஜூன் 8ம் தேதி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை மு.க.ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அணுக்கழிவு மையம் அமைக்க தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வின் முடிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று ஆய்வு செய்தோம். டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, ஜூன் 5ம் தேதி அணுக்கழிவு மையத்துக்கு எதிராக இரண்டு ட்வீட் வெளியிட்டதும், அதைத் தொடர்ந்து அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் தெரியவந்தது. இதன் மூலம், டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது தவறானது என்று உறுதியானது.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று ஆய்வு செய்தோம். கமலின் ட்விட்டர் பக்கம் (Archived Link), அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் (Archived Link)ட்விட்டர் பக்கத்தில் பார்த்தபோது அணுக் கழிவு மையம் தொடர்பாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை என்பது தெரிந்தது. வேறு பேட்டி ஏதேனும் அளித்துள்ளாரா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை (பொதுவாக கமலின் பேட்டி, அறிவிப்பு, ட்விட் அனைத்தும் கட்சியின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படுவது வழக்கம்). அணுக் கழிவு மையம் விவகாரத்தில் கமல் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தவில்லை என்பது உறுதியானது. அதேசமயம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தனர். ஆனால், அணுக் கழிவு மையம் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிப்பேன். அதுவரை கருத்து எதையும் தெரிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அணுக் கழிவு மையம் தொடர்பாக பேட்டி ஏதேனும் அளித்துள்ளாரா என்று தேடினோம். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில்,
1) அணுக்கழிவு மையம் அமைக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை கிடைத்துள்ளது.
2) டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கை கிடைத்துள்ளது.
3) கமல் இந்த விவகாரத்தில் எந்த ஒரு அறிக்கையையோ, ட்வீட்டையோ வெளியிடவில்லை.
4) ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யும் கலந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அணுக்கழிவு மையத்தை எதிர்க்காத ஸ்டாலின், டி.டி.வி, ரஜினி, கமல்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: Mixture
