
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதிவைத்து வந்ததாக ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்…
தகவலின் விவரம்:
துண்டு சீட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமாட
மு.க.ஸ்டாலின் கையில் ஒரு அட்டை உள்ளது. அதில், ஏதோ எழுதப்பட்டது போல காட்டியுள்ளனர். அதை பெரிதாக்கி காட்டியதுபோன்று மற்றொரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப் போட 2ம் பொத்தானை அழுத்தவும்’என்று எழுதப்பட்டுள்ளது.
வாக்களிக்க எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் வந்தது போல, இந்த புகைப்படம் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை அறியாமல், தி.மு.க, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சியினர் அதிக அளவில் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசக்கூடியவர். அவர் பேசும் எல்லா இடத்திலும் கையில் துண்டுச் சீட்டு இருக்கும். மு.க.ஸ்டாலினின் துண்டு சீட்டை கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் நிறைய மீம்ஸ் உலாவுகின்றன. அப்படி துண்டு சீட்டைப் பார்த்துப் படித்தும் கூட தவறாக பேசியதாக பல முறை செய்தி வெளியாகி இருக்கிறது. இது பற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றார். அப்போது, வாக்குப் பதிவு மைய ஸ்லிப், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றார். வாக்களிக்கச் சென்ற படத்தை எடுத்து, அவர் கையில் இருந்த ஸ்லிப்பை பெரியதாக்கி காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், ‘ஓட்டு போட 2ம் பொத்தானை அழுத்தம்’ என்று எழுதியிருப்பது போன்று இருந்தது. துண்டு சீட்டை வைத்து பேசக்கூடியவர் ஸ்டாலின் என்ற விமர்சனம் இருப்பதால், இந்த பதிவு உண்மை என்று பலரும் பகிர்ந்துள்ளனர்.
படத்தை பார்க்கும்போதே மார்ஃபிங் செய்திருப்பது தெரிந்தது. படத்தில் உள்ள எழுத்துக்கள் கையால் எழுதியது போல இல்லை. கணினியில், பெயிண்ட், பேட்டோஷாப் உள்ளிட்ட மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் பேனாவால் எழுதப்பட்டது போல இருந்தது. மேலும், எழுதப்பட்ட பகுதி மட்டும் தனியாக தெரிந்தது.

உண்மை படத்தை கண்டறிய கூகுளில், ‘மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்’ என்று டைப் செய்து தேடினோம். அதில், மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வாக்களிக்க வரிசையில் நின்ற படம் கிடைத்தது.


நமக்குக் கிடைத்த படத்தில், மேற்கண்ட பதிவில் உள்ளது போன்று மு.க.ஸ்டாலின் கையில் துண்டுச் சீட்டுடன் இருக்கும் படம் கிடைத்தது. ஆனால், அதில் எதுவும் எழுதியிருக்கவில்லை.

ஒருவேளை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள அசல் படம் கிடைக்குமா என்று கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அசல் படம் கிடைத்தது.


அந்த படத்தில் ஸ்டாலின் கையில் இருப்பது ஆதார் அட்டை போல இருந்தது. ஆனால், தெளிவின்றி இருந்தது. அதிலும், எதுவும் எழுதப்படவில்லை.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய, fotoforensics.com-ல் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அதில், எடிட் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் நிறம் மாறி இருப்பது உறுதியானது.
மு.க.ஸ்டாலின் கையில் ஸ்லிப் வைத்திருக்கும் அசல் படம். இதில், எந்த திருத்தமும் இன்றி தெளிவாக இருப்பதை காணலாம்.

ஃபேஸ்புக் பதிவில் இருந்து எடுத்த படத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த முடிவு. துண்டுச்சீட்டில் எழுதப்பட்ட இடத்தில் மட்டும் மாறுதல் இருப்பது காட்டப்பட்டுள்ளது.

நம்முடைய ஆய்வில் மு.க.ஸ்டாலினின் அசல் போட்டோ கிடைத்தது, பதிவில் உள்ள படம் எடிட் செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பதிவு விஷமத்தனமானது தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதி வந்த மு.க.ஸ்டாலின்? – வைரல் புகைப்படம்
Fact Check By: Praveen KumarResult: False
