
அயோத்தியில் அரசு வழங்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு பதில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரம்மாண்ட மருத்துவமனையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி என்று உள்ளது. நிலைத் தகவலில், “இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை…!
நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு. இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொறுப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் கபில்கான் அவர்களை நியமனம் செய்யப்படும்.
AIIMS மருத்துவமனையைவிடப் பிரம்மாண்டமாக_ செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு…!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Syed Hyder Ali என்பவர் 2020 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கை அடிப்படையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், இதற்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச அரசு அயோத்தியிலிருந்து 25 கி.மீ தொலைவில் மசூதி கட்ட இடத்தை ஒதுக்கியது. இந்த நிலத்தை ஏற்க வேண்டாம் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறிய நிலையில், அதை ஏற்பதாக உத்தரப்பிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் அறிவித்தது.
அயோத்தியில் இருந்து 25 கி.மீ தொலைவில் மசூதி கட்டுவதால் எந்த பயனும் இல்லை. அயோத்தியில் இருந்து தொழுகை நடத்த இங்கு யாரும் வரப்போவது இல்லை. எனவே, இந்த இடத்தில் கல்வி நிறுவனம் அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கையாக உள்ளது என்று செய்தி வெளியானது.

அதே நேரத்தில், அரசு வழங்கிய இடத்தில் மசூதி கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக முதல் கட்டமாக அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், அங்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்றும், சிறையில் உள்ள டாக்டர் கஃபீல் கான் அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
கூகுளில் அயோத்தி, பாபர் மசூதி, தனிப்பூர் என்று கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடியபோது, புதிதாக அமைக்கப்பட உள்ள மசூதி தொடர்பான செய்திகள் கிடைத்தன. இதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், புதிதாக கட்டப்படும் மசூதிக்கு பாபர் பெயர் வைக்கப்படாது என்றும், அங்கு மசூதியோடு நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் செய்திகள் கிடைத்தன.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி தரப்பில் இது தொடர்பாக உ.பி சன்னி வஃக்ப் வாரிய தலைமை செயல் அதிகாரி சையத் முகம்மது ஷோபியிடம் பேசப்பட்டது. அதற்கு அவர்கள், பாபர் மருத்துவமனை கட்டப்படுவதாகவும் அதன் தலைவராக கஃபீல் கான் நியமிக்கப்படுவார் என்றும் பகிரப்படும் தகவல் தவறானது. வதந்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பாபர் மருத்துவமனையின் மாதிரி என்று பகிரப்படும் கட்டிடம் உண்மையில் எங்கு உள்ளது என்று பார்த்தோம். அது உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத் நகரில் அமைய உள்ள பிரைட் ஸ்டார் மருத்துவமனையின் மாதிரி என்பது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
அயோத்தில் அரசு ஒதுக்கிய இடத்தில் மசூதி கட்டுவதற்கு பதில் மருத்துவமனை, கல்வி நிலையம் தொடங்க பலரும் விருப்பம் தெரிவித்து வரும் செய்தி கிடைத்துள்ளது.
மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் செய்தி கிடைத்துள்ளது.
மசூதி அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதும், மசூதிக்கு பாபர் பெயர் வைக்கப்படாது என்றும் வெளியான செய்தி கிடைத்துள்ளது.
பாபர் மருத்துவமனை கட்டப்படும் என்ற தகவல் தவறானது என்று உ.பி சன்னி வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், பாபர் மருத்துவமனை கட்டப்படுவதாக வெளியான ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அயோத்தி அருகே பாபர் மருத்துவமனை கட்டப்படுகிறதா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
