
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிரிப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
1.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் புதிய தலைமுறை நெறியாளர், திருவள்ளுவர் பிரச்னை தொடங்கி நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை பட்டியலிட்டு மிக நீண்ட கேள்வி ஒன்றை கேட்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சிரிக்கின்றனர்.
இந்த வீடியோவை Aps Ashok Kumar என்பவர் நவம்பர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளார். 9800க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
எந்த ஒரு தொலைக்காட்சி விவாதமாக இருந்தாலும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து பேசவைப்பார்கள். ஆனால், இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எச்.ராஜா மற்றும் சமீபத்தில் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற தமிழிசை ஆகியோரை வைத்து விவாதம் நடத்தியது போன்று வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில், புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன், “பெரிய வெங்காயம் ஒரு கிலோ 75 ரூபாய், சின்ன வெங்காயம் 90 ரூபாய், பெட்ரோல் விலை உயர்ந்தாச்சு, வேலை இருக்குமா இருக்காதா என்ற சந்தேகத்தோட தினந்தினம் வேலைக்கு போக வேண்டியதா இருக்கு. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு நாளையும் கடத்துவதே சாமானிய மக்களுக்கு பிரச்னையாக உள்ளது. அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளக்கூட சிரமப்பட வேண்டியதாக உள்ளது. எங்கே பார்த்தாலும் வேலையில்லை என்ற பிரச்னை.
இன்ஃபோசிஸ்ல 10 ஆயிரம் பேரை தூக்கப்போறதா செய்தி வருது. எல்லாமே கேட்கவே பயமாக உள்ளது. எல்லோருமே நடுத்தர வயதைச் சார்ந்தவர்களாக உள்ளனர். வேலை போச்சுன்னா அடுத்தவேளை சோத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு தெரியலை. அவ்வளவு பிரச்னை நாட்டில் இருக்கும்போது திருவள்ளுவரை இந்து மதத்தைச் சார்ந்தவர், அவருக்கு காவி உடை போடுவோம், ஏற்கனவே அவருக்கு அப்படித்தான் இருந்துச்சு, இதையெல்லாம் மாத்தினாங்க… இதெல்லாம் எதுக்கு? என்ன செய்யப்போகுது, என்ன மாத்தப்போகுது? ஒருவேளை சோத்துக்கு இதெல்லாம் ஆகுமா? உங்களுடைய நோக்கம் என்ன?” என்று கேட்கிறார்.
உடனே பிரதமர் மோடி தொடங்கி எச்.ராஜா வரை அனைவரும் சிரிக்கின்றனர். மீண்டும் நெறியாளர் தன்னுடைய கேள்வியை கேட்கிறார். ஆனாலும் அவர்கள் சிரிப்பது போல வீடியோ உள்ளது. பார்க்கும்போதே இது மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தெரிகிறது.
புதிய தலைமுறையில் வெளியான அசல் வீடியோவைத் தேடினோம். அப்போது யூடியூபில் புதியதலைமுறை ஊடகத்தால் நவம்பர் 6, 2019 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. “மைக்கை கழட்டி விட்டுச் சென்ற கனராஜ்… காரசார வாக்குவாதம்” என்று தலைப்பிட்டிருந்தனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளது போன்று நெறியாளர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். அந்த வீடியோவைப் பார்த்தோம்.
Archived Link |
அதில் சரியாக, 6.03வது நிமிடம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் இடம் பெற்ற காட்சி வந்தது. அதில் நெறியாளர் கேள்வி கேட்க அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.ஆர்.சேகர் பதில் அளிக்கிறார். இந்த வீடியோவை எடுத்து எடிட் செய்து பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பதில் சொல்ல முடியாமல் சிரிப்பது போல தவறாக சித்தரித்தது தெரிந்தது. இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டுள்ளோம். அது கீழே…
இந்த ஆதாரம் அடிப்படையில், புதிய தலைமுறை நெறியாளர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கான ஆளுநர் தமிழிசை, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சிரிப்பதாக பகிரப்படும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:புதிய தலைமுறை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி, அமித்ஷா சிரித்தனரா?
Fact Check By: Chendur PandianResult: False
