கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

அரசியல் சமூக ஊடகம்

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Nakkheeran 2.png
Article LinkArchived Link

நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் எல்லாம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று மூன்றாக பிரிக்கப்படும் என்று சுதந்திர தினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய மாவட்டங்களுள் ஒன்றான கடலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது என்று நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டமும் பிரிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், இது தொடர்பாக வேறு எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை.இதைத் தொடர்ந்து செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் கடலூர் மாவட்டத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரித்து கட்சி பணிகளை செய்து வந்தனர். கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராகவும், மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் கடலூர் எம்பியாக இருந்த அருண்மொழிதேவன் மாவட்டசெயலாளராக இருந்து வந்தனர்.

Nakkheeran 3.png

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தை அதிமுக கட்சியில் மூன்றாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனை தேர்வு செய்துள்ளர்” என்று இருந்தது. அ.தி.மு.க-வின் கடலூர் மாவட்டம் இரண்டில் இருந்து மூன்றாக பிரிக்கப்பட்டது என்று தந்தி டி.வியும் செய்தி வெளியிட்டுள்ளது.

Thanthi tvArchived link

இதன் மூலம் ஏற்கனவே கடலூர் மாவட்டத்துக்குள் இரண்டு மாவட்டங்களாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க தற்போது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டது தெரியவந்தது. அ.தி.மு.க மாவட்டம் பிரிக்கப்பட்டது என்று குறிப்பிடாமல், கடலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு என்று செய்தியின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் அரசின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது போன்று கடலூர் மாவட்டமும் பிரிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணமே தோன்றுகிறது. பரபரப்புக்காக இப்படி தவறான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்தியில் பரபரப்புக்காக தவறான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

Fact Check By: Chendur Pandian 

Result: False Headline