
ஆந்திரா, தெலங்கானாவுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய பிரபல ஜூவல்லரி நிறுவனம் தமிழகத்துக்கு எதுவும் தரவில்லை என தமிழர்களைத் திருந்தும்படி கூறும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரபல ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொரோனா நிவாரணம் வழங்கும் புகைப்படத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுத்த பதிவை பகிர்ந்துள்ளனர்.
அதில், “லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி பிறந்து வளர்ந்தது நெல்லூர். பிழைக்க வந்தது சென்னை. சாதாரண நடுத்தர குடும்பம் இன்று தென்னிந்தியாவில் 15கடைகள் பல ஆயிரம் கோடி சொத்துக்கள். கொரானா நிவாரண நிதியாக தலா ஒருகோடி ஆந்திர தெலுங்கானா மாநிலங்களுக்கு. ஆனால் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை. இதுதான் தமிழ்நாட்டு நிதர்சனம்.
இது போலவே தமிழகத்தில் பிழைப்பு நடத்த வந்த கன்னடர், மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், ராஜஸ்தானிகள் என அவரவர் மாநிலங்களுக்கே பண உதவிகள் நலம் செய்வர். தமிழக பணத்தைக் கொண்டு தமிழர் விழிப்பாக இருந்து அயலவருக்கு வணிகத்தில் லாபத்தை அள்ளி கொடுக்காமல் இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மையே….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஸ்ரீநிவாஸ் பா ஆனந்த என்பவர் 2020 ஆகஸ்ட் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லலிதா ஜூவல்லரி உரிமையாளர் தமிழகத்துக்கு நிதி உதவி செய்யவில்லை என்று பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், பெரிய அளவில் இல்லாமல் ஒன்று, இரண்டு ஷேர் என்று இருந்தது. தற்போது திடீரென்று பலரும் இதை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும் தமிழர்களை விமர்சித்து கடுமையாக பதிவிடவே இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.

கிரண் குமார் ஆந்திரா, தெலங்கானாவுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு தமிழகத்தைப் புறக்கணித்தாரா? அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் ஓரவஞ்சனை என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
அதில், ஆந்திரா, தெலங்கானாவுக்கு தலா ரூ.1 கோடி வழங்கிய கிரண் குமார், தமிழகத்துக்கு தரவில்லை என்பது போல செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி 2020 மே 18ம் தேதி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் தமிழகத்துக்கு நிதி உதவி கிடையாது என்று எந்த வகையிலும் கிரண் குமார் அறிவித்ததாக இல்லை. இரு மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, தமிழகத்துக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை, அதனால் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார் என்ற வகையில் கருத்து சொல்லப்பட்டு இருந்தது.

ஆங்கிலத்தில் தேடிய போது, 2020 மே 6ம் தேதி கிரண் குமார் தெலங்கானாவுக்கு ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கியது தெரிந்தது. அந்த செய்தியிலேயே தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவுக்கு தலா ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி லலிதா ஜூவல்லரி சார்பில் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, சொன்னது போல கிரண் குமார் நிவாரண நிதி வழங்கினாரா என்று பார்த்தோம். ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை நேரில் சந்தித்து உதவி வழங்கிய கிரண் குமார், தமிழகத்தில் தமிழக முதல்வரை சந்திக்காமல் தலைமைச் செயலாளரிடம் ரூ.1 கோடிக்கான காசோலை கொடுத்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக 2020 மே 20ம் தேதி தினத்தந்தி வெளியிட்டிருந்த செய்தியில், ” லலிதா ஜூவல்லரியின் சார்பில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.3 கோடியை நிதி உதவியாக அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.கிரண்குமார் வழங்கி இருக்கிறார்.

தமிழகத்துக்கான நிதியை தலைமைச் செயலாளர் க.சண்முகத்திடம் நேரில் சென்று கிரண்குமார் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கிரண்குமார் கூறுகையில், ‘மக்களின் ஆதரவிலும், அரசின் ஆதரவிலும்தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம். கொரோனா இடர்பாட்டை அனைவரும் சந்திக்கும் இவ்வேளையில் என்னால் இயன்ற உதவியை செய்வதை என் கடமையாக நினைக்கிறேன். இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். அரசின் பாதுகாப்புப் பணிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர்கள் நமக்குப் புதிதல்ல. இதுவும் கடந்து போகும். நாம் வெற்றி பெறுவோம்’ என்றார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
பல முன்னணி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலத்துக்கும் தலா ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதியை லலிதா ஜூவல்லரி நிறுவனம் வழங்கப்போவது தொடர்பான செய்தி மே முதல் வாரத்திலேயே வெளியாகிவிட்டது.
ஊரடங்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து கிரண் குமார் காசோலை வழங்கியதும், தமிழகத்தில் தலைமைச் செயலாளரைச் சந்தித்து காசோலை வழங்கியதும் உறுதியாகி உள்ளது.
தமிழகத்திற்கு கடைசியாக கொடுத்ததால் நிவாரண நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்துவிட்டது போன்ற தவறான தகவலை சில ஊடகங்கள் வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் தொழில் செய்து கொண்டே, தமிழகத்திற்கு நிவாரண உதவி வழங்காமல் தெலங்கானா, ஆந்திராவுக்கு லலிதா ஜூவல்லரி கிரண் குமார் நிதி வழங்கினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:லலிதா ஜூவல்லரி நிறுவனம் கொரோனா நிவாரணம் வழங்கவில்லையா?- இதோ உண்மை!
Fact Check By: Chendur PandianResult: False
