
பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தாமல் கை கோர்த்தபடி நிற்பது போலவும், கோட்சே சிலைக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கோட்சே என்ற தீவிரவாதியின் சிலையை வணங்கும் மோடி ஒரு குற்றவாளியே..
முதல் படத்தில் காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு அருகில் கை கோத்தபடி பிரதமர் மோடி நிற்கிறார். அந்த படத்தில், “தேச தந்தை காந்தியை வணங்கமாட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த படத்துக்குக் கீழே, மற்றொரு சிலைக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தும் புகைப்படம் உள்ளது. அந்த படத்தின் மீது, “தேச தந்தையைக் கொன்ற கோட்சேயை வணங்குவாராம்” என்று எழுதப்பட்டுள்ளது.
காந்திக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி மறுப்பது போலவும், காந்தியைக் கொலை செய்த கோட்சேவை வணங்குவது போலவும் இந்த பதிவு உள்ளது. இந்த படத்தை சிவகங்கை மாவட்ட தமஜக அப்பாஸ் என்பவர் 2019 மே 15ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேலே இருக்கும் முதல் படம் படம் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையின்போது எடுக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியை கூகுளில் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே அகமதாபாத் நகரம் வந்ததும், அவரை ஆரத்தழுவு மோடி வரவேற்ற செய்தியும் கிடைத்தது. மேலும், அந்த நிகழ்ச்சியின் வீடியோவும் கிடைத்தது.

அதில், ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவியை காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்கிறார். அங்கு அவர்கள் முன்பு இருந்த மலர்களை எடுத்து தூவும்படி சொல்கிறார். உடன், பிரதமர் மோடி மலர்களை எடுத்து காந்தியடிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதைத் பார்த்து ஜப்பான் பிரதமரும் அவரது மனைவியும் அஞ்சலி செலுத்துகின்றனர். இது தொடர்பான வீடியோ கீழே…
இதன் மூலம், காந்தியடிகள் சிலைக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவில்லை என்ற தகவல் பொய் என தெரியவருகிறது.
அடுத்தது, சாவர்கர் சிலைக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தும் படத்தை ஆய்வு செய்தோம். படத்தை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது. அந்த படம் தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன.
2015ம் ஆண்டு சாவர்க்கர் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட் தொடர்பான செய்திக்கு இந்த படத்தை இந்தியாடுடே.இன் பயன்படுத்தி இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் கிளிக் செய்யுங்கள்.
அதற்கு முன்பு, 2012ம் ஆண்டு சாவர்க்கர் பிறந்த தினத்தையொட்டி அவரைப் பற்றிய குஜராத்தி மொழி பட டிவிடி வெளியீட்டு விழா தொடர்பான செய்தியில் இந்த படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம், வீர சாவர்க்கர் சிலைக்கு மோடி அஞ்சலி செலுத்திய படத்தை, கோட்சே சிலைக்கு அஞ்சலி செலுத்தியதாக தவறாக பதிவிடப்பட்டது உறுதியானது. இது தொடர்பான செய்தி மற்றும் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில், காந்தி சிலைக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தவில்லை என்பதும் கோட்சே சிலைக்கு வணக்கம் செலுத்தினார் என்றும் கூறப்பட்ட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
