சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்?

Coronavirus அரசியல் இந்தியா

‘’சொந்த ஊருக்கு நடந்து சென்றதால் ஏழைப்பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் நிகழ்ந்த பரிதாபம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், சாலையோரமாக, பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏழைப்பெண்ணை இப்படி நீண்ட தொலைவு நடக்க விட்டு, சாலையோரம் பிரசவம் நிகழ வைத்த கொடுமையை பாஜக செய்துள்ளது. மத்திய அரசு கூறும் டிஜிட்டல் இந்தியா இதுதான்,’’ என்று விமர்சித்துள்ளனர். 

இதனை பலரும் தற்போதைய புலம்பெயர் தொழிலாளர்களின் சோகங்களில் ஒன்று என நினைத்து வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியா முழுக்க, கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக பொது முடக்கம் நீக்கப்பட்டு வந்தாலும், இந்திய அளவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் போக்குவரத்து சேவைகள் சீரடையவில்லை.

இதற்கிடையே, போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், கடந்த 2 

மாதங்களாக, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து நடந்தே தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.

இது சமீப காலத்தில் நிகழ்ந்த மாபெரும் மனித சமூக அவலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடை பயணமாகவே 1000 கிலோ மீட்டர் வரை நடந்துசென்றதால், கடும் உடல் உபாதைக்கும் ஆளாகினர். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமர்சனத்திற்கு ஆளான இந்த விவகாரம் பற்றி ஊடகங்களிலும் நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது.

அதேசமயம், புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புபடுத்தி, நிறைய தவறான தகவல்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் அரசியல் உள்நோக்கத்திற்காகச் சிலர் பகிர்ந்து வருகிறார்கள். இத்தகைய தவறான தகவல் சமூக ஊடக பயனாளர்களை, மத்திய அரசுக்கு எதிராக திசைதிருப்பக்கூடிய பிரசாரமாகப் பயன்படுகிறது.

இதன் ஒருபகுதியாகவே, மேற்கண்ட புகைப்படமும் ஃபேஸ்புக்கில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், அந்த புகைப்படம் தற்போதைய கொரோனா பொது முடக்கத்தின்போது எடுக்கப்பட்டது இல்லை. அது 2017ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். இதற்கான பதில் அந்த புகைப்படத்திலேயே உள்ளது.

2017ம் ஆண்டு எடுத்த புகைப்படம் என்றாலும், இதன் பின்னணி என்னவாக இருக்கும் என விவரம் தேடினாம். இதன்படி, மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பற்றி ட்விட்டர் வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Twitter post linkArchived Link

இந்த ட்விட்டர் பதிவில், இந்தியா டுடே செய்தியின் லிங்கும் இணைக்கப்பட்டிருந்தது. அதை வைத்து தேடியபோது நிறைய ஊடகங்கள் இதுபற்றி செய்தி வெளியிட்ட விவரம் கிடைத்தது. 

IndiaToday Archived LinkOutlookindia Archived Link 

இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம், கத்னி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான பார்மனி என்ற கிராமத்தைச் சேர்ந்த பீனா என்ற பெண்தான் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர். அவருக்கு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உதவிக்கு ஆம்புலன்ஸ் அழைத்தும் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், நடந்தே மருத்துவமனை செல்ல அவர் முயன்றுள்ளார். 20 கிமீ நடந்த நிலையில், சாலையோரம் அப்படியே சரிந்து விட்டார். அவருக்கு திடீரென பிரசவம் அதே இடத்தில் நிகழ்ந்தது. பிறந்த குழந்தை சாலையில் விழுந்ததால் அடிபட்டு இறந்துவிட்டது. அவர் புலம்பெயர் தொழிலாளி கிடையாது.

மேலும், மத்தியப் பிரதேசத்தில் 2017ம் ஆண்டில் ஆளுங்கட்சியாக இருந்தது பாஜகதான். எனினும், இதற்கும், தற்போதைய புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாகிறது.

கொரோனா பொது முடக்கத்தின்போது, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் 150 கிமீ நடந்தே சென்று குழந்தை பெற்றுள்ளார். ஆனால், அந்த சம்பவம் வேறு. நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் பற்றிய சம்பவம் வேறு.

எனவே, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மைத்தன்மை ஆராயாமல் ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

இதேபோன்று ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து வெளியான வதந்திகள் பற்றி நாம் நடத்திய ஃபேக்ட்செக் கட்டுரைகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி பழைய புகைப்படத்தை புதியதுபோல பகிர்ந்து ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் சந்தேகங்களுக்கு எமது வாட்ஸ்ஆப் எண்ணை (+91 9049044263) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False