
‘’ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமா தான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்,’’ என்ற தலைப்பில் மோடி, அமித் ஷா புகைப்படத்தை முன்வைத்து குட் ரிட்டர்ன்ஸ் பகிர்ந்துள்ள ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:
குறிப்பிட்ட செய்தியை ஒன் இந்தியா இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதே செய்தி, குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Facebook Link
Archived Link
இந்த செய்தியின் தலைப்பை பார்த்து, பலரும் பரபரப்பாக ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமக்கு ஃபேஸ்புக் தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளை கிளிக் செய்தால், அவை குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியை திறந்து காட்டுகிறது. அந்த செய்தியின் தலைப்பே இப்படித்தான் உள்ளது. அது, மோடி, அமித்ஷா மற்றும் பாஜக.,வை சர்ச்சைக்குள் சிக்க வைப்பது போலவும் உள்ளது.
இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link
இந்த செய்தியில், மோடி அரசு தொழிலாளர் துறை, நிலம், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப் போகும் சீர்திருத்தங்களைப் பற்றியும், அது யாருக்கு, எப்படி சாதகமாக இருக்கும் என விமர்சித்து எழுதியுள்ளனர்.
இதன்படி, மோடி அரசு இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்னவோ உண்மைதான். இதுபற்றிய பல ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மோடி அரசு திட்டமிட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களை விமர்சித்தும், தனது சொந்த கருத்துகளை சேர்த்தும் இந்த செய்தியை எழுதியுள்ளனர். இதை நாம் எந்த தப்பும் சொல்லவில்லை.
ஆனால், இந்த செய்தியின் தலைப்பு வீண் குழப்பத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. அதாவது, மோடியும், அமித் ஷாவும், பாஜகவும் நேரடியாகவே ‘நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமா செயல்படறோம்‘ என்று சொல்வது போல இச்செய்தியின் தலைப்பு உள்ளது. அத்துடன், செய்தியின் முதல் பத்தியிலேயே, ‘’எல்லா பயலும் எங்களுக்கு கீழதான், மாநில அரசுகளை உடைத்தெறியும் மோடி சர்க்கார் 2.0 திட்டம்‘’, என்று குறிப்பிட்டுள்ளனர். இது, ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட செய்தியின் தலைப்பாக இருக்கிறது.

ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியின் தலைப்பும் சற்று குழப்பமாகவே உள்ளது. அது நமக்கு முக்கியமில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியை பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.
மேற்கண்ட செய்தியின் தலைப்பை பார்த்தால், மோடி, அமித் ஷா அல்லது பாஜக தரப்பில், நாங்க பணக்காரங்களுக்கு சாதகமாக செயல்படுகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல உள்ளது. ஆனால், செய்தியின் உள்ளே இப்படி எந்த விசயமும் இல்லை. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றியே விமர்சிக்கின்றனர். இவ்வளவு கஷ்டப்பட்டு நீண்ட கட்டுரை எழுதியவர்கள், தலைப்பு வைப்பதில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே நமது கருத்து.
மொத்தத்தில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறாக உள்ளது என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று உரிய ஆதாரங்களின்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமாதான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்: குட் ரிட்டர்ன்ஸ் செய்தியால் குழப்பம்
Fact Check By: Parthiban SResult: False Headline
