
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2
நக்கீரன் நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் “ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்…” என்ற நிலைத்தகவலுடன் செய்தி ஒன்று 2019 ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியின் தலைப்பில், ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி – பிசிசிஐ அதிகாரி பரபரப்பு தகவல்” என்று இருந்தது. கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக எண்ணி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. 38 வயதான தோனி சமீப காலமாக சரியாக விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று வதந்திகள் பரவின. இந்திய கிரிக்கெட் உலகில் தோனி பற்றித் தொடர்ந்து பல வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன.
இந்தநிலையில், இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற இருப்பதால், நான் இருக்க மாட்டேன் என்று விடுப்பு தோனி கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த செய்தியில், பெயர் வெளியிட விரும்பாத பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த செய்தியில், மூன்று விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம். கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி தற்போது ஓய்வு பெறவில்லை. பாராமிலிட்டரி ராணுவ பணிக்கு செல்ல இருப்பதால் இரண்டு மாதங்கள் தற்காலிக விடுப்பு கேட்டுள்ளார். தோனியின் இந்த முடிவை நாங்கள் கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருக்கு தெரிவித்துள்ளோம்” என்றார். இந்துவில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இந்தியா டுடே வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், ஓய்வு பெறுவார் என்று நீண்டுகொண்டிருந்த சர்ச்சைக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்ததாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையங்கள் செய்தி வெளியிட்டன. நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அப்படி இருக்கும்போது, “ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி – பி.சி.சி.ஐ அதிகாரி பரபரப்பு தகவல்” என்று ஒரு செய்தியை நக்கீரன் இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த ஃபேஸ்புக் பதிவுக்கு வந்திருந்த கமெண்ட்களை ஆய்வு செய்தோம். அதில் ஒருவர் “அனைவருக்கும் ஓய்வு பொதுவானது. இதில் வேதனைப்பட ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள் தோனி” என்று கூறியிருந்தார். வேறு சிலரும் தோனி ஓய்வுக்கு ஆதரவாக கமெண்ட் செய்திருந்தனர். சிலர் இது தவறான தகவல் என்று திட்டி கமெண்ட் செய்திருந்தனர்.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட அந்த செய்தியை கிளிக் செய்து படித்தோம்.

ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி என்று தலைப்பிட்டிருந்தனர். செய்தியில் லீட் இல்லை. நேரடியாக செய்தி தொடங்கியது. இதில், பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட மூத்த பி.சி.சி.ஐ அதிகாரியின் பேட்டியைத்தான் குறிப்பிட்டிருந்தனர். அதில் தெளிவாக, “தற்காலிக ஓய்வு எடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்” என்று இருந்தது.

செய்தியின் உள்ளே, “தற்காலிக ஓய்வு எடுக்க விரும்புவதாக தெரிவித்தார்” என்று கூறிவிட்டு, தலைப்பில், “ஓய்வை அறிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர். கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற பலரும் சொல்லிவந்த நேரத்தில், ஓய்வை அறிவித்தார் தோனி என்ற தலைப்பு தவறான புரிதலையே ஏற்படுத்துகிறது.
நம்முடைய ஆய்வில் வாசகர்களை ஈர்க்க ஃபேஸ்புக் நிலைத்தகவல் மற்றும் செய்தியின் தலைப்பு தவறாக வைத்துள்ளது தெரிந்தது. இதன்படி, இந்த செய்தியின் தலைப்பு தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி?” – பரபரப்பை கிளப்பிய தலைப்பு!
Fact Check By: Chendur PandianResult: False Headline
