
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Shajahan Banu என்பவர் 2019 டிசம்பர் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் போல பலரும் இந்த பதிவை வெளியிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. அங்கு போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தி, நகல் கிழிப்பு போராட்டம் செய்தது. மற்றபடி நாட்டில் வேறு எங்கும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்ததாக செய்திகள் இல்லை. அதுவும் மும்பையில் மிக பிரம்மாண்ட கூட்டம் கூடியிருந்தால் உள்நாட்டு முதல் சர்வதேசம் வரை அனைத்து ஊடகங்களிலும் அதுதான் முக்கிய செய்தியாகியிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
Search Link 1 | Search Link 2 |
நம்முடைய தேடலில் பலரும் மும்பையில் திரண்ட கூட்டம் என்று தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இந்த படத்தை பகிர்ந்து வருவது தெரிந்தது. தேடல் முடிவின் முதல் முடிவாக ஒரு ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது. அதை பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை அவர்கள் 2019 நவம்பர் 12 அன்று வெளியிட்டிருந்தார். அதில் “Maulidin Manzo S.A.W A Nijeriya” என்று குறிப்பிட்டிருந்தனர். அது என்ன என்று புரியவில்லை. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்புதான் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த புகைப்படம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம், ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல இது டிசம்பர் 13ம் தேதி மும்பையில் கூடிய கூட்டம் இல்லை என்பது உறுதியானது.
Facebook Link | Archived Link |
இருப்பினும், இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது ஒரு வீடியோ கிடைத்தது. அது 2019 நவம்பர் 10ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில் “world biggest jashne julus. Allama taher shah” சிட்டகாங் என்று குறிப்பிட்டு இருந்தனர். 3வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற பாலம் தெளிவாகத் தெரிவதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
இந்த படம் ஒரு மாதத்துக்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த படம் வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் எடுக்கப்பட்டது என்று யூடியூபில் வெளியான வீடியோ கிடைத்துள்ளது.
மும்பையில் இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில், சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு எதிராக மும்பை முகம்மது அலி சாலையில் டிசம்பர் 13, 2019 அன்று மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
