
‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் முடிவுகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
தகவலின் விவரம்:

Archived Link
இதில், கனிமொழி சிறு வயதில் தனது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த தலைவரின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார். அதுவேறு யாருமல்ல ஹிந்திக்கு எதிராக ரயிலே வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கருணாநிதியின், மகள் #கனிமொழி. தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது?? தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும் ?? அவ்வளவு தான் பகுத்தறிவு,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் உள்ள புகைப்படத்தை முதலில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றும், நடிகர் சிவக்குமார் குடும்பத்தை, கருணாநிதி, கனிமொழி சந்தித்தபோது எடுத்த புகைப்படம் என்றும் விவரம் கிடைத்தது.

இதுதொடர்பாக, ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, FilmiBeat வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, வேறொரு சம்பவம் தொடர்பான பழைய புகைப்படத்தை எடுத்து, மற்றொரு சம்பவத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, விபி சிங், தேவி லால், கருணாநிதி சந்திப்பு எங்கேயும் நிகழ்ந்ததா என கூகுளில் ஆதாரம் தேடினோம். அப்போது, 1988ம் ஆண்டு நிகழ்ந்த, தேசிய முன்னணி கூட்டம் பற்றிய விரிவான செய்தி கிடைத்தது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் 1989ம் ஆண்டு விபி சிங், தேவி லால் பேசியதாகவும், கனிமொழி அதனை தமிழில் மொழி பெயர்த்ததாகவும் சொல்கின்றனர். இது மிகத் தவறான தகவல். இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தில் கனிமொழியே காணவில்லை. அப்படி ஒருவேளை அவர் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தாலும் 20 வயது நிரம்பிய கனிமொழியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்த கூட்டத்தில் மொழிபெயர்ப்பு செய்ய விட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பிட்ட கூட்டத்தில் தேவிலால் பங்கேற்று பேசியிருக்கிறார். எனினும், அது நடந்தது 1988ல்தான்; 1989ல் இல்லை.
அந்த கூட்டத்தில் இந்தியில் பேசியது சர்ச்சையாக மாறவே, தேவிலால் தனது பேச்சை ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொண்டார் என்று இந்தியா டுடே செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, கனிமொழிக்கு இந்தி தெரியுமா என ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தி தெரியாது என்று கூறி கனிமொழி சர்ச்சை செய்த ஒரு செய்தியின் விவரம் கிடைத்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். கனிமொழியின் பேச்சு பற்றிய வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு இந்தி பேச தெரியாது என்பது போல, ஒரு ட்விட்டர் பதிவை கனிமொழி வெளியிட்டிருந்தார். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இருந்தாலும், கூடுதல் சந்தேகத்தின் பேரில், கனிமொழியின் அலுவலக எண்ணை (04424991080) தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கம் பெற முயற்சித்தோம். ஆனால், அவர்கள் நமது குழுவினரை ஆபாச வார்த்தைகளால், திட்டி, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டனர்.
2வது முறையாக, மீண்டும் அதே எண்ணை தொடர்பு கொண்டோம். ஃபோனை எடுத்த நபர், காது கூசும் அளவுக்கு திட்டியதோடு, இதுபற்றி போலீஸ் புகார் செய்வேன், என்று மிரட்டினார்.
‘’நாங்கள் ஃபேஸ்புக் தகவல்களை சரிபார்க்கக்கூடிய IFCN அங்கீகாரம் பெற்ற ஒரு ஃபேக்ட்செக்கர்; உங்கள் நலனுக்காகத்தான் கேட்கிறோம்; உரிய பதில் கூறாமல், எங்களை தரக்குறைவாகப் பேசுவது ஏன்?’’, என்று கேட்டபோதும் அவர் ஆபாச அர்ச்சனையை கைவிடவில்லை.
பிறகு, கனிமொழி உதவியாளரை தொடர்பு கொண்டு இதுபற்றி முறையிட்டோம். அவரும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இதன்பேரில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் புகார் செய்தோம். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு சரி.
திமுக என்றில்லை; எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், ஃபேக்ட்செக்கர் அதிலும் ஃபேஸ்புக்கில் தமிழில் பரவக்கூடிய வதந்திகளை தடுக்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம் என்று கூட பாராமல் எங்களை தரக்குறைவாகப் பேசுவதையும், மிரட்டுவதையும் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர்.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த விவரம்,
1) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறானது.
2) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதைப் போல, 1989ல் சென்னையில் தேவி லால், விபி சிங் பங்கேற்ற கூட்டம் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை.
3) 1988ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் விபி சிங், தேவி லால், கருணாநிதி, என்டி ராமராவ் ஒன்றாக, பங்கேற்றுள்ளனர். அதில், கனிமொழி பங்கேற்றதற்கான ஆதாரம் இல்லை.
4) கனிமொழிக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பதில் குழப்பமே நிலவுகிறது.
மொத்தத்தில், இந்த பதிவில், நிரூபிக்கப்பட முடியாத, ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களே நிரம்பியுள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களை கொண்டதாக உள்ளதென்று, நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குழப்பமான தகவல்களை நமது வாசகர்கள் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா?
Fact Check By: Parthiban SResult: Mixture
